"திமுக ஒரு பிரைவேட் கம்பெனி.." தேஜஸ்வி சூர்யா அட்டாக்! நீதிக்கட்சி குறித்தும் பரபர கருத்து
சென்னை: தமிழ்நாடு பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தேஜஸ்வி சூர்யா பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசினார். குறிப்பாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க அக்கட்சி தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, போராட்டங்கள் மட்டுமின்றி இளைஞர்களைக் கவரும் வகையில் பல்வேறு சிறப்புக் கூட்டங்களையும் கீட தமிழக பாஜக நடத்தி வருகிறது.
அப்படித்தான் தமிழக பாஜகவின் சிந்தனையாளர்கள் பிரிவு சார்பில் "தமிழ்நாடு டைலாக் 2022" என்ற சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக பாஜகவின் இளம் தலைவர்களில் ஒருவரான தேஜஸ்வி சூர்யா கலந்து கொண்டு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

தேஜஸ்வி சூர்யா
இந்த நிகழ்ச்சியில் பேசிய பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தேசியத் தலைவரும் எம்பியுமான தேஜஸ்வி சூர்யா, சுதந்திரத்துக்கு முன்பு உருவாக்கப்பட்ட கட்சிகளில், ஆர்எஸ்எஸ் தவிர, நீதிக்கட்சி உட்பட மற்ற எந்தவொரு அமைப்புகளுக்கும் இந்தியா என்ற சித்தாந்தம் சிந்தனையிலும் இல்லை, செயலிலும் இல்லை என்றார். ஆர்எஸ்எஸ் இயக்கம் மட்டுமே அப்போது முதலே இந்தியா என்ற சித்தாந்தம் உடன் செயல்பட்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார். அதுவே இப்போது வரை தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நீதிக்கட்சி
மேலும், காங்கிரஸ் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட கட்சி எனக் குறிப்பிட்ட அவர், கம்யூனிஸ்ட் கட்சியும், நீதிக்கட்சியும் அந்நிய நாடுகளில் இருந்து உருவான சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது என விமர்சித்தார். இந்த மூன்று கட்சிகளின் சித்தாந்தங்களும் நாட்டில் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பேரழிவை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

பாஜக மட்டுமே
நாட்டில் செழிப்பை உருவாக்க மகத்தான பங்களிப்பை வழங்கிய ஒரே சித்தாந்தத்தை பாஜக மட்டுமே முன்னெடுப்பதாகவும் அவர் கூறினார். மேலும், தமிழ்நாட்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் பேர் காசிக்குப் புனித யாத்திரை செல்வதாகக் குறிப்பிட்ட அவர், அதேபோல் வட மாநிலங்களில் இருந்து பலர் ராமேஸ்வரத்துக்கு யாத்திரை வருவதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழகத்திற்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பல ஒற்றுமை இருப்பதாகவும் அதைப் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

உங்களுக்குப் புரியும்
தொடர்ந்து பேசிய அவர், "குஜராத்தில் பாஜக தொடர்ந்து ஏழாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது. மேற்கு வங்கத்திலும் கடந்த காலங்களில் இடதுசாரிகள் ஏழு முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருந்தார்கள். உங்களுக்கே புரியும். குஜராத்தில் அனைத்து தரப்பு மக்களும் முன்னேறியுள்ளனர். அதேநேரம் மேற்கு வங்கத்தில் அத்தனை துறை பின்தங்கியுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடி அரசு அதிகப்படியான மக்களை வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருந்து மீட்டுள்ளது.

திமுக மீது அட்டாக்
இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து இப்போது தான் அதிகப்படியானர் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். நாடு இப்போது சந்தித்து வரும் பெரும்பாலான பிரச்சினைகளுக்குக் காங்கிரஸ் கட்சியே முக்கிய காரணம். நீதிக்கட்சி தான் இப்போது திமுகவாக உருமாறிய உள்ளது. இப்போது திமுக முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தில் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பட்டியலிடப்படாத தனியார் நிறுவனம் போலவே செயல்பட்டு வருகிறது. இது உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.

அரசியல் மாற்றம்
இதுபோன்ற தவறான சித்தாந்தங்களைக் கொண்டிருக்கும் கட்சிகளை உடனடியாக ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டிற்கு வலுவான ஒரு தலைவர் தேவைப்பட்டார், இதன் காரணமாகவே பாஜகவின் தற்போதைய மாநிலத் தலைவராக கே.அண்ணாமலை நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் மிக அமைதியாக.. ஆனால் அதேநேரம் உண்மையான ஒரு புரட்சி நடந்து வருகிறது. இந்தியா எப்போதும் கலாச்சார ரீதியாக ஒன்றுபட்டே இருந்துள்ளது.

பொய்யான கருத்துகள்
அந்நிய நாட்டுச் சக்திகள் நமது நாட்டின் பன்முகத்தன்மை சிதைக்க முயல்கிறது. நாட்டில் இருக்கும் மக்களிடையே தவறான தகவல்களைப் பரப்பி மோதல்களை உருவாக்க முயல்கின்றனர். நமது நாட்டின் கலாச்சாரத்தைப் பிரிட்டிஷ் மிஷனரிகளின் அழித்துவிட்டனர். ராபர்ட் கால்டுவெல் போன்றவர்கள் சமஸ்கிருதத்தை மிக மோசமாகச் சித்தரித்தனர். இது உயர் சாதியில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் மக்களை அடிமைப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட மொழி என்ற ஒரு பொய்யைப் பரப்பியதே அவர்கள் தான். அரசியல் ரீதியாக நாம் மாற்றத்தைக் கொண்டு வந்துவிட்டால் போதும், இங்குள்ள அனைத்து பிரச்சினைகளும் ஒவ்வொன்றாகச் சரியாகிவிடும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications