வேங்கைவயல் வழக்கில் ஷாக்.. போலீஸ் விசாரணை “டெட் ஸ்லோ”.. போட்டு உடைத்த ஆணையம்.. ஹைகோர்ட்டில் பரபர!
சென்னை: வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி சத்தியநாராயணன் ஆணையத்தின் இடைக்கால அறிக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வன்கொடுமைத் தடுப்பு சட்டம், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டுவைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கடந்தும் தீண்டாமை கொடுமைகள் இன்னும் அரங்கேறி வருகிறது. அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள சமூகநீதி என்பது இன்னமும் தொலைதூர கனவாகவே உள்ளது. பட்டியலின மக்கள் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் புதுக்கோட்டை சிபிசிஐடி போலீசார் பெயரளவில் மட்டுமே விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிர விசாரணை ஏதும் நடத்தவில்லை. வெறும் கண்துடைப்புக்காக ஒரு சிலர் மட்டும் விசாரிக்கப்பட்டுள்ளனர். உண்மை குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்தும் எண்ணம் ஏதும் இல்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் அளித்து 90 நாட்கள் கடந்த நிலையிலும், வழக்கு தொடர்பாக ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. முறையாக விசாரிக்கப்படவும் இல்லை. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஒரு நபர் ஆணையம், இரண்டு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், நீதிபதி சத்தியநாராயணன் ஆணையம் அளித்த இடைக்கால அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்தார். அதேபோல சிபிசிஐடி போலீசாரின் விசாரணை நிலை குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்தார்.
மேலும், "வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. வழக்கில் 191 சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வழக்கில் சந்தேகிக்கப்படும் 25 நபர்களிடம் ஏற்கெனவே மரபணு சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் 4 பேரிடம் இரண்டு வாரங்களில் சோதனை நடத்தி முடிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் அடையாளம் காண்பதில் சிரமம் இருந்தால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றலாம். இந்த விவகாரத்தில் அரசு ஏன் இன்னும் மவுனமாக இருக்கிறது. நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டது என்றால் அதன் விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிபதி சத்தியநாராயணன் குழு அளித்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், காவல்துறையின் விசாரணை மந்தகதியில் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, அறிக்கையை பாதுகாப்பாக வைக்கும்படி சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.
மேலும், ஆணையத்தின் விசாரணையில் புகைப்பட ஆதாரங்களும் இணைக்கப்பட்டுள்ளது. புகைப்படங்கள் கடந்த டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டது என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டும், புகைப்படத்தில் இருக்கும் நபர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஒரு வழக்கு தொடர்பாக 9 மாதங்களாகவா விசாரணை நடத்துவீர்கள் என அதிருப்தி தெரிவித்தனர்.
பின்னர் இந்த வழக்கின் புலன் விசாரணை நிலை குறித்த அறிக்கையை 2 வாரத்திற்குள் தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட் நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications