பல கோடி போச்சு! கோர்ட்டே சொன்னாலும்.. வெளியாகுமா தக் லைஃப்? கடுகடு கமல்.. கொந்தளிக்கும் கன்னடிகாஸ்!
சென்னை: மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் கன்னட மொழியை அவமதித்துவிட்டதாக கூறி கர்நாடகாவில் படத்தை திரையிட முடியாது என கூறுகின்றனர் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையினர். தொடர்பாக கமல் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இதற்கு இடையே நீதிமன்றம் உத்தரவிட்டாலும் தியேட்டர் ஓனர்கள் படத்தை வெளியிடுவார்களா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதனால் படத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்கின்றனர்.
தமிழ் திரை உலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதே நேரத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2 படுதோல்வியை சந்தித்த நிலையில் இருவரும் இணையும் தக் லைஃப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
மேலும் படத்தில் முதன் முறையாக கமலஹாசன் சிம்பு நடித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. படத்தில் டீசர், டிரைலர் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து படத்துக்கான ப்ரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக கடந்த சில தினங்களாகவே மணிரத்னம், கமலஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி ஆகியோர் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு பயணித்து படத்தை ப்ரமோஷன் செய்து வருகின்றன. மேலும் தொலைக்காட்சிகள், யூட்யூப் சேனல்களுக்கும் பேட்டி அளித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
அதில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டு இருந்தார். அப்போது பேசிய கமலஹாசன் 'தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்' என பேசினார். அதை ஏற்பது போல சிவராஜ்குமார் தலையாட்டி, கை தட்டினார். இந்த நிலையில் கமலஹாசன் கன்னட மொழியை அவமதித்துவிட்டதாக கூறி போராட்டம் வெடித்திருக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கமலஹாசனின் தக் லைஃப் பட பேனர்கள் கிழிக்கப்பட்டதோடு கமலஹாசனின் படங்களையும் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அது மட்டும் இல்லாமல் கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய, கர்நாடக பாஜக தலைவர் உள்ளிட்டோர் கமலஹாசனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். படத்தை வெளியிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பும் எச்சரித்துள்ளது. இதை தொடர்ந்து கமலஹாசனின் கருத்து கன்னட மக்களின் மனதை புண்படுத்தி உள்ளது. எனவே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் தங்களை திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாது எனக் கூறியுள்ளார் கர்நாடகா கலாச்சாரத் துறை அமைச்சர்.
கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் தக்கலைத் திரைப்படத்தை வெளியிட மாட்டோம் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூறி இருக்கிறது. இந்த நிலையில் கமலஹாசனின் ராஜ்கமல் ஃப்லிம் இன்டர்நேஷனல் நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில் கர்நாடகாவில் படத்தை வெளியிட தடை விதித்திருப்பது சட்டவிரோதம் எனவும், தடையை நீக்கி திரைப்படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
அதே நேரத்தில் நீதிமன்ற தீர்ப்பு எப்படி வந்தாலும் அதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம். கர்நாடகாவில் எந்தத் திரையரங்கிலும் கமலஹாசனின் படங்களை திரையிட மாட்டோம் என கர்நாடகா வர்த்தக சபை தலைவர் நரசிம்மலு திட்டவட்டமாக கூறியிருக்கிறார். ஒருவேளை நீதிமன்றம் படத்தை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டாலும், தியேட்டர் ஓனர்கள் படத்தை வாங்கி வெளியிடுவார்களா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ஆளும் காங்கிரஸ் தரப்பும் படத்தை வெளியிட விடாது என்றே கூறுகின்றனர். தொடர்ந்து நான்கு நாட்களாக கமலஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடகாவினர் கூறி வந்தாலும், முடியவே முடியாது என கமலஹாசன் மறுத்திருக்கிறார். இதனால் படம் திட்டமிட்டபடி நாளை மறுநாள் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
அதே நேரத்தில் படம் வெளியாக விட்டால் பல கோடி நஷ்டம் ஏற்படும் என்கிறனர். கர்நாடகாவுக்கான டப்பிங் பணிகள் நிறைவடைந்து நூற்றுக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே படத்தை வெளியிடுவது தொடர்பாக விநியோகஸ்தர்கள், திரையரங்கினர் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், கன்னட மொழி சர்ச்சை விவகாரம் தொடர்பாக படத்தை வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் தயங்குகின்றனர். மேலும் அட்வான்ஸை திருப்பி கொடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இது கமலுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications