மீனவர்களை சட்டசபைக்கு அனுப்புவோம்.. கேளம்பாக்கத்தில் உறுதியளித்த கமல்ஹாசன்
சென்னை: மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் ஒரு மீனவர் சட்டசபையில் இருப்பார் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கேளம்பாக்கத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசுகையில் திருவான்மியூர் என்றால் திரு+ஆமைகள்+ ஊர். பல்லாயிரம் வருடங்களாக அதாவது 120 மில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் உயிர்கள் அவை. அது மட்டுமல்ல, கடல் நீரோட்டத்துடன் 180 மைல் வரை ஒரே ஸ்ட்ரெச்சில் நீந்த கூடிய உயிரினங்கள் அவை.
மீனவர்களின் நண்பன் ஆமை என்றால் அது மிகையாகாது. சொரி என்ற ஒரு வகை மீனை அந்த ஆமைகள் சாப்பிடாமல் இருந்தால் மீன் பிடித் தொழிலுக்கே சேதமாகிவிடும். அது மட்டுமல்ல ,நம் வணிக முன்னோர்கள், இந்த ஆமை வழித்தடங்களை பின்பற்றிச் சென்று உலகெங்கிலும் வணிகம் செய்திருக்கிறார்கள்.

மக்கள் காக்கப்பட வேண்டும்
இந்த உயிரினங்களை காக்க வேண்டியது மக்களாகிய நமது கடமை. மக்கள் காக்கப்பட வேண்டும் என குரல் எழுப்பப்படும் போது அவர்கள் நம்பியிருக்கும் அந்த உயிர்களை பாதுகாக்க வேண்டியதும் இவை அழிந்து போக விடாமல் அடுத்த தலைமுறைக்கு நாம் எடுத்துச் செல்வதும் நமது கடமையாகும்.

செயல்கள்
இதெல்லாம் இந்த காலக்கட்டத்தில் நடக்காது என சொல்வதை ஒப்புக் கொள்ளவே முடியாது. மக்கள் நீதி மய்யம் இங்கே சுற்றுச்சூழலுக்காகவும் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு அரசியலை முன்னெடுப்பதுதான் எங்கள் வேலை. நேர்மை என்பது எங்கள் ஆட்சியிலும், இந்த புரிதல் என்பது எங்கள் செயல்களிலும் இருக்கும்.

நீர் நிலைகள்
இந்த குடிமராமத்து திட்டத்தை தான் கண்டுபிடித்து நடத்திக் கொண்டிருப்பது போல் அதை பெரிய சாதனையாக முதல்வர் பீற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால் இது ராஜராஜ சோழன் காலத்தில் உருவாக்கப்பட்ட ஏரிகள், நாய்க்கர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட குளங்கள், நீர் நிலைகள் எல்லாம் மீட்டெடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு என்ற உறுதியோடு நாங்கள் வந்திருக்கிறோம்.

அரைகுறை பிராஜக்ட்
இவர்களுக்கு அந்தமாதிரியான உறுதிமொழியெல்லாம் இல்லை என்பது இந்த கால்வாயே சாட்சி. இதற்கு என்ன செலவாகியிருக்கிறது என யாருக்காவது தெரியுமா? இதில் ஜெர்மன் டெக்னாலஜி எதுவுமே எனக்கு தென்படவில்லை. யாரோ சிமென்ட்டை கொப்பளித்து துப்பி மாதிரி இருக்கிறது. அந்த அளவுக்கு இது ஒரு அரைகுறை பிராஜக்ட். இந்த சூழலே கெட்டுவிடும்.

வித்தியாசம்
இங்கு இருப்பவர்கள் நல்ல காற்றை சுவாசித்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் 5 வருடத்தில் வீட்டை காலி செய்து விட்டு செல்லும் நிலை ஏற்படும். உங்களுடைய எங்கள் போராட்டத்தில் எங்கள் பங்கும் இருக்கும். ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இயற்கைக்கு தெரியாது.

நன்றி
இந்த பகுதி மக்களின் பாதுகாப்பும் எங்களுக்கு முக்கியம். ஒரு அரசுக்கு மீனவர்களிடத்திலிருந்தும் வருமானம் வருகிறது. மீனவர்களின் டர்ன் ஓவர் 60ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். நாங்கள் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் சட்டசபையில் ஒரு மீனவர் இருப்பார். உப்பை சுவாசித்தவர்களுக்கு நன்றி கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

தோள் கொடுப்போம்.
என் வாழ்நாளில் நான் பார்த்த நீர் நிலை இன்று வெறும் குப்பை மேடாகவும் வாழும் இடமாகவும் மாறியிருக்கிறது. அதனால்தான் மழை வந்தால் உள்ளே செல்வது கடினமாக இருக்கிறது. இந்த மாதிரி ஒரு சூழல் இங்கேயும் நிகழ வாய்ப்புண்டு. அது நிகழ விடக்கூடாது. உங்களுடன் தோள் கொடுக்க மக்கள் நீதி மய்யம் இருக்கிறது என கமல்ஹாசன் பேசினார்.












Click it and Unblock the Notifications