கரூர் கூட்ட நெரிசலில் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு.. செருப்பு, கற்கள் வீசப்பட்டன.. ஆதவ் அர்ஜூனா மனு
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாக ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜி குறித்து பேசியபோது பவர் கட் செய்யப்பட்டு, செருப்பு, கற்கள் வீசப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் கரூரில் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க என்னை அனுமதிக்கவில்லை என்றும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் ஆதவ் அர்ஜுனா மனு அளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை இரவு கரூரில் பரப்புரை செய்தார். இந்த பரப்புரையில் விஜயைப் பார்ப்பதற்காக அளவுக்கு அதிகமாக கூட்டங்கள் கூடியது. அப்போது கூட்டநெரிசல் ஏற்பட்டு 41 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

செந்தில் பாலாஜிக்கு தொடர்பு
இதற்கிடையே கூட்ட நெரிசலில் நடந்தது என்ன? எப்படி இது நேரிட்டது? என்பது தொடர்பாக ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி அருணா ஜெகதீசன் நேற்றே விசாரணையை தொடங்கினார். கரூரில் பரப்புரை நடந்த இடத்தில் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து கரூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார்.
இன்றும் இரண்டாவது நாளாக விசாரணையை அருணா ஜெகதீசன் தொடங்கியிருக்கிறார். நேற்று இரவு வரை தவெக நிர்வாகிகள் யாரும் கரூர் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்க்கவில்லை. விஜயும் கூட சென்னைக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கூட்ட நெரிசல் சம்பவத்தில் உள்ளூர் அரசியல்வாதிக்கு தொடர்பு இருப்பதாக மதுரை ஐகோர்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனா மனு
ஆனால் தற்போது நீதிமன்றம் தசரா விடுமுறையில் இருப்பதால் நாளை மனு தாக்கல் செய்தால் வரும் வெள்ளிக்கிழமை (அக்.3) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என பதிவாளர் தெரிவித்துள்ளார். ஆதவ் அர்ஜுனா மனுவில் கூறியிருப்பதாவது:-
கரூரில் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உள்ளூர் அரசியல்வாதிக்கு தொடர்பு இருக்கிறது. செந்தில் பாலாஜி குறித்து பேசியபோது மின் தடை செய்யப்பட்டது. செருப்பு, கற்கள் வீசப்பட்டன. திடீரென அப்பாவி மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டன. மக்கள் மீது தடியடி நடத்த என்ன காரணம்?
சம்பவம் நடப்பதற்கு முன்பே தயார் நிலை
சம்பவம் நடைபெறுவதற்கு முன்பே மருத்துவமனைகள் தயார் நிலையில் இருந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சந்திக்க சென்ற என்னை அனுமதிக்கவில்லை. கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா மனுவில் கூறியுள்ளார்.
முன்னதாக ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட ட்விட் பதிவில், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவுவும், தருமம் மறுபடி வெல்லும் என்று பதிவிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications