அதிமுகவுக்கு அல்வா தான்.. விஜய் எஸ்கேப் ஆகப் போறாரு எடப்பாடிக்கு எதுவுமே கிடைக்காது! உடைத்த பிரபலம்!
சென்னை: கரூர் துயர சம்பவத்தை அடுத்து நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க விஜய் மீதான விமர்சனத்தை வாக்குகளாக மாற்ற அதிமுகவும் பாஜகவும் முயற்சித்து வருகிறது. விஜய் அதிமுக கூட்டணிக்கு வருவார் என எடப்பாடி பழனிச்சாமி வெளிப்படையாகவே பேசி வருகிறார். இந்த நிலையில் விஜய் அதிமுக கூட்டணிக்கு செல்ல மாட்டார் எனக் கூறியிருக்கிறார் பெங்களூர் புகழேந்தி.
நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், அவரது முதல் நேரடி தேர்தலான 2026 சட்டமன்ற தேர்தல் எதிர் கொள்ளவிருகிறார். கடந்த ஆண்டு தனது கட்சியை ஆரம்பித்திருந்தும், இடையில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பிற தேர்தல்கள் நடைபெற்ற போதிலும், விஜய் அதனை பெரிதாக கவனிக்கவில்லை.
முதன்முதலாக சந்திக்கும் சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றி பெறுவதே அவரது நோக்கம். இதற்காக அவர் வாரம் தோறும் மாவட்டங்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சுற்றி மக்கள் தொடர்புப் பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார்.

கரூர் சம்பவம்
ஒவ்வொரு சனிக்கிழமைகளையும் பிரச்சார தினமாக மாற்றி, மாவட்ட வாரியாக சுற்றுப்பயண திட்டம் தயார் செய்யப்பட்டிருந்தது. திருச்சி முதல் தொடங்கி திருவாரூர், நாகை பகுதிகளுக்கு செல்லும் பிரம்மாண்ட சுற்றுப்பயணம் மிகச் சிறப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில், கரூரில் ஏற்பட்ட குழப்பமான சம்பவம் பிரச்சாரத்திற்கு சிக்கல் ஏற்படுத்தியது. கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 110க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் விஜய்யின் திட்டமிட்ட பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
விஜய் மீது விமர்சனம்
இதனால் சமூக வலைதளங்களில், அரசியல் மற்றும் பொதுவெளியில் விஜய்க்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. நீதிமன்றம் கூட, விஜய்யின் தலைமைத் திறன்கள் குறைபாடு கொண்டதாக விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி விஜய் மீது தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் அவரை கூட்டணிக்கு அழைத்து வர வேண்டுமென அதிமுக பாஜக விரும்புகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவரது பிரச்சார கூட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தினர் கொடிகளுடன் கலந்து கொள்ளும் நிலையில் அவர் நிச்சயம் கூட்டணிக்கு வருவார் என நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.
அதிமுக தவெக கூட்டணி
இந்த நிலையில் அதிமுக கூட்டணிக்கு விஜய் வரவே மாட்டார் எனக் கூறியிருக்கிறார் அதிமுக முன்னாள் நிர்வாகியான பெங்களூர் புகழேந்தி. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்," அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது பிரச்சார வாகனத்தில் நின்று கொண்டு அங்கே பாருங்கள் கொடி பறக்கிறது என தமிழக வெற்றி கழகத்தின் கொடியை காட்டி அரசியல் செய்கிறார். ஆனால் விஜயோ பாஜக எங்களுக்கு எதிரி என கூறி இருக்கிறார். பாஜகவை கூட்டணியில் வைத்துக்கொண்டு தவெக பொடியை காண்பித்து அது பறக்கிறது என எப்படி எந்த தைரியத்தில் எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார் என தெரியவில்லை.
தமிழக வெற்றிக் கழகம்
அதிமுக தொண்டர்கள் தான் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை வைத்திருக்கின்றனர். உண்மையிலேயே சொந்தக் கட்சிக்காரரை அடுத்த கட்சியின் கொடியைப் பிடிக்கச் செய்த அவமானம் அதிமுகவுக்கு எடப்பாடி பழனிச்சாமியால் ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் வரை விஜய் அந்த கட்சியின் கூட்டணிக்கு வர மாட்டார். விஜய் நேரடியாக கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள். எடப்பாடி பழனிச்சாமி ரோடு ஷோ நடத்தி வருகிறார். ஆனால் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரோடு நடத்தக்கூடாது எனக்கூறி இருக்கிறது. அவருக்கு மட்டும் அரசு எப்படி அனுமதி வழங்கி வருகிறது. கரூர் சம்பவம் போல மீண்டும் ஒரு துயரம் நடந்தால் யார் பொறுப்பேற்பது" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications