கரூர் துயரம்.. அனைத்து ஊர்களிலும் தவெகவின் நினைவேந்தல் கூட்டம்.. 17 நாட்களுக்கு பின் விஜய் உத்தரவு!
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நினைவேந்தல் கூட்டத்தை நடத்த தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் வீடியோ கால் மூலமாக ஆறுதல் கூறியுள்ள நிலையில், அடுத்தக் கட்டமாக அவர்களை ஒரே இடத்தில் சந்திக்க மண்டபம் ஒன்றை பார்த்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் விரைவில் கரூர் மாவட்ட எஸ்பியிடம் அனுமதி கடிதம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரூரில் செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் போது விஜய் உடனடியாக கரூரில் இருந்து புறப்பட்டு திருச்சி வந்தார். அதன்பின் திருச்சியில் இருந்து தனி விமானம் மூலமாக சென்னை வந்தார். தொடர்ந்து 4 மணி நேரத்திற்கு பின் விஜய் கரூரில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக பதிவிட்டார்.

அதே சமயம் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடங்கி சிடிஆர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலரும் தலைமறைவாகினர். தவெக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் யாரும் கரூர் அரசு மருத்துவமனை பக்கமே வரவில்லை. அதேபோல் அடுத்த நாள் கரூரில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் இறுதிசடங்குகளிலும் தவெகவினர் பங்கேற்கவில்லை.
விரைவாக முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை தவெக நிர்வாகிகள் அணுகினர். அதே நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றம், விஜய்க்கு கொஞ்சம் கூட தலைமைப் பண்பு இல்லை என்று கடுமையாக சாடியது. தொடர்ந்து கடந்த வாரம் தவெக தலைவர் விஜய் கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வீடியோ கால் மூலமாக ஆறுதல் தெரிவித்தார்.
இந்த சூழலில் கரூர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் மாற்றியது. அதனை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் கொண்ட குழுவையும் நியமனம் செய்தது. இதன்பின் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். சுமார் 20 நாட்களாக தலைமறைவாக இருந்த அவர், சிபிஐ விசாரணைக்கு மாற்றிய பின் வெளியில் வந்தார்.
இதனால் தவெக தரப்பில் உற்சாகம் ஆகி இருக்கிறது. அதேபோல் கரூர் மாவட்டத்திற்கு விஜய் செல்லவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கரூர் எஸ்பியிடம் அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க ஒரு தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதற்கான தேதி விரைவில் முடிவு செய்யப்பட்டு, மாவட்ட கண்காணிப்பாளரிடம் அனுமதி பெறப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் தவெக மாவட்டச் செயலாளர்களுக்கு விஜய் ஒரு உத்தரவை போட்டுள்ளார். அதாவது கரூரில் உயிரிழந்த 41 பேருக்கும் ஒவ்வொரு மாவட்டத்தில் நினைவேந்தல் கூட்டத்தை நடத்த அறிவுறுத்தி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications