பத்திர மோசடியில் சிக்கிய ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனர் நாதன் ஆண்டர்சன்? அதிர்ச்சி தகவல்!
சென்னை: ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனர் நாதன் ஆண்டர்சன் பத்திர மோசடி தொடர்பான விசாரணைக்கு உள்ளாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கும், ஆன்சன் ஃபண்ட்ஸ் நிறுவனத்துக்கும் இடையே ரகசிய கூட்டு இருந்ததாக கனடாவை சேர்ந்த புலனாய்வு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கனடாவின் ஒன்டாரியோவில் நடந்த நீதிமன்ற வழக்கு விசாரணையில் சர்ச்சைக்குரிய ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் மற்றும் அதன் நிறுவனர் நாதன் ஆண்டர்சனுக்கு எதிராக கணிசமான ஆதாரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது ஹிண்டன்பர்க்கின் ரகசிய உறவுகள், பத்திர மோசடி மற்றும் அதன் நிறுவனர் நாதன் ஆண்டர்சனின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

நேட் ஆண்டர்சனின் ஹிண்டன்பர்க் மற்றும் ஆன்சன் ஃபண்ட்ஸ் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் இடையே பல்வேறு பத்திர மோசடிகள் உள்ளன என்றும், இந்தக் கட்டுரையை எழுதும் நேரத்தில் 5% தகவல்களை மட்டுமே நாங்கள் மதிப்பாய்வு செய்துள்ளோம் என்றும் கனடாவைச் சேர்ந்த ஆன்லைன் புலனாய்வு செய்தி நிறுவனமான மார்க்கெட்ஃப்ராட்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
“ஹிண்டன்பர்க் மற்றும் ஆன்சன் இடையேயான முழு பரிமாற்றமும் யு.எஸ். செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனில் விசாரிக்கப்படும்போது, 2025 ஆம் ஆண்டில் நேட் ஆண்டர்சன் மீது பத்திர மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயல்பாடுகளை திடீரென மூடுவதாக ஹிண்டன்பர்க் எடுத்துள்ள முடிவு பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது, குறிப்பாக இந்த காலகட்டம் கவனிக்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்புக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக, ஹிண்டன்பர்க் செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
நவம்பர் 2024 இல், ப்ளூம்பெர்க்கின் கிராக் ரிசர்ச் குழு ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டது. இது ஹிண்டன்பர்க் உள்ளிட்ட பல்வேறு ஷார்ட் செல்லிங் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்குப் பின்னால் உள்ள ரகசிய சக்திகளை அம்பலப்படுத்துவதாக இருந்தது. “ஷார்ட் செல்லர்களின் ரகசிய பேச்சுக்கள், கூட்டுகள் நீதிமன்ற விசாரணையில் வெளிப்படுகின்றன" என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, ஹிண்டன்பர்க் ரிசர்ச் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மோயஸ் கஸ்ஸாம் என்பவரால் இயக்கப்படும் கனடாவை தளமாகக் கொண்ட ஆன்சன் ஃபண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை மையமாகக் கொண்டது.

ஆன்சன் உடனான உறவை மறுத்த ஹிண்டன்பர்க், ப்ளூம்பெர்க்கிடம் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மூலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான லீட்களைப் பெறுகிறோம். ஒவ்வொரு லீடையும் நாங்கள் கவனமாக சரிபார்க்கிறோம். எங்கள் பணியில் முழு சுதந்திரத்தை எப்போதும் பராமரித்து வருகிறோம்" என்று தெரிவித்தது.
இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து, ஆண்டர்சன், ஆன்சன் அல்லது வேறு யாருடனும் எந்த கூட்டும் இல்லை என்று பகிரங்கமாக மறுத்தார். இருப்பினும், கசிந்த மின்னஞ்சல்கள் வேறுவிதமாக இருந்தன. 2019 ஆம் ஆண்டில் ஒரு பிசினஸ் தொடர்பாக ஹிண்டன்பர்க் மற்றும் ஆன்சனின் சஞ்சீவ் பூரி இடையே பரிமாறிக்கொள்ளப்பட்ட டஜன் கணக்கான மின்னஞ்சல்கள் ஆன்சன், ஹிண்டன்பர்க் எடிட்டோரியலில் தலையீடு கொண்டிருந்ததை குறிக்கின்றன. எனினும் இருவருக்கும் இடையே ஏதேனும் நிதி ஏற்பாடுகள் இருந்ததா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஷார்ட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் மீது வழக்குத் தொடராத அதானி குழுமம், கடந்த ஆண்டு வெளிநாட்டு உளவுத்துறை கூட்டாளர்களுடன் ரகசிய விசாரணைகளைத் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிண்டன்பர்க் முதன்முதலில் அதானி குழுமம் குறித்த தமது அறிக்கையை ஜனவரி 2023 இல் வெளியிட்டது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த அறிக்கை 150 பில்லியன் டாலருக்கும் அதிகமாக அதானியின் மார்க்கெட்டில் சரிவை ஏற்படுத்தியது.
அதானி குழுமத்தின் மீதான தாக்குதல்களில் ஆன்சனின் பங்கு தெளிவாக இல்லை. எனினும், சில அறிக்கைகள், அவர்களால் ஆர்கனைஸ்டு செய்யப்பட்ட குற்றமும் இதில் அடங்கும் என்று கூறுகின்றன. ஆன்சன் நிறுவனரின் மனைவி மரிசா சீகல் கஸ்ஸாம் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா ஆகியோர் ஜேபி மோர்கனில் சக ஊழியர்களாக இருந்தனர். அங்கு மஹுவா மொய்த்ரா கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் பணியாற்றினார். ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு மக்களவையில் அதானி குழுமத்தின் மீதான தாக்குதல்களை கடுமையாகத் தொடங்கியவர் மொய்த்ரா என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications