BJP Kushbu: சாதித்த நிதிஷ்+ மோடி! ராகுல் காந்தி அரசியலை விட்டு விலக நல்ல சான்ஸ்! குஷ்பு விமர்சனம்
சென்னை: அரசியலில் இருந்து விலக ராகுல்காந்திக்கு மேலும் ஒரு காரணமும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது என தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்பு கடுமையாக விமர்சித்துள்ளார். பீகார் சட்டசபைத் தேர்தலில் ஜேசியூ+ பாஜக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
இதுகுறித்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பீகாரில் என்டிஏ கூட்டணி வென்றுவிட்டது. நிதிஷ்குமார், நரேந்திர மோடி உள்ளிட்ட சில தலைவர்கள் வெல்வதற்காகவே பிறப்பார்கள். இருவரும் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் எண்ணற்ற சேவைகளை செய்துள்ளதால் என்டிஏ கூட்டணியை மக்கள் மீண்டும் ஆட்சியில் அமர்த்தியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சிக்கு அழிவுக்காலம் வந்துவிட்டது. அரசியலில் இருந்து விலக ராகுல்காந்திக்கு மேலும் ஒரு காரணமும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது என குஷ்பு விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் தோல்வி குறித்து குஷ்பு போட்ட பதிவிற்கு பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். கடந்த 2019, 2021, 2024, ஆகிய ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களில் பாஜக தொடர்ந்து தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று குஷ்பு, அரசியலை விட்டு விலகுவாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அது போல் 2016, 2018-ஆம் ஆண்டு நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு ராகுல் காந்திக்கு குஷ்பு வாழ்த்து கூறி அவரை ஆஹா ஓஹோ என பாராட்டிய ஸ்கிரீன்ஷாட்டை போட்டு குஷ்புவை விமர்சித்து வருகிறார்கள்.
பீகாரில் உள்ள 243 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
அது போல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியும் இணைந்து மகா கூட்டணி அமைத்துள்ளன. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் களத்தில் உள்ளது. இந்த தேர்தலில் 243 தொகுதிகளுக்கு 2616 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 இடங்களிலும் மகா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 61 இடங்களிலும், ஆர்ஜேடி கட்சி 143 இடங்களிலும் போட்டியிட்டுள்ளது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. பிறகு வாக்குச் சாவடி இயந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலில் வெற்றி பெற 122 இடங்கள் பெரும்பான்மை பலம் பெற வேண்டும்.
இந்த நிலையில் ஜேடியூ+ பாஜக கூட்டணி 201 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
101 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 91 தொகுதிகளில் முன்னிலை வகித்து தனிப்பெரும்பான்மையுடன் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி அண்மைக்காலமாக நிறைய தேர்தல்களில் தோல்வியை சந்தித்துள்ளது. பீகார் தேர்தலில் காங்கிரஸ் செயல்பாட்டை வைத்து வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக காங்கிரஸ் கட்சி, திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்க திட்டமிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

பீகார் சட்டசபை தேர்தல் நடந்த போதும், வாக்கு எண்ணிக்கையின் போது ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் டெல்லியில் இல்லாமல் வெளிநாட்டில் இருப்பது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் பாஜக கூட்டணியே வெல்லும் என கூறியிருந்தது. ஆனால் தேஜஸ்வி யாதவோ, கருத்து கணிப்புகளில் தனக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications