ஒரே உத்தரவால் அதிரடி மாற்றம்.. சென்னையில் ஆம்னி பஸ்ஸில் செல்வோர் கவனிக்க வேண்டிய மாற்றங்கள் என்ன?
சென்னை: சென்னையில் ஆம்னி பஸ்ஸில் செல்வோர் கவனிக்க வேண்டிய மாற்றங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். கிளாம்பாக்கம் மட்டுமே ஒரே பேருந்து நிலையம் என்கிற போதும், தற்காலிமாக சில மாதங்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவால் தீர்வு கிடைத்துள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் அரசு பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ்கள் அனைத்துமே கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்துதான் புறப்பட்டு செல்ல வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இது தொடர்பாக கடந்த மாதம் போக்குவரத்துத்துறை ஆணையர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்திய அதிகாரிகள், சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தை ஒரே நாளில் மாற்றினார்கள். இந்த மாற்றம் சென்னையில் உள்ள மக்களை வெகுவாக பாதித்தது. அதிகாலையில் கிளாம்பாக்கம் வருவோர், சூட்டேஸ், குழந்தைகளுடன் அரசு பேருந்துகளில் ஏறித்தான் சென்னைக்குள் போக வேண்டிய நிலை ஏற்பட்டது. இல்லாவிட்டால் ஆயிரங்களை செலவு செய்து கார்களில் அல்லது ஆட்டோக்களில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், சென்னையில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை எல்லாம் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா விசாரித்து வருகிறார். இந்த வழக்குகள் நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, "ஏற்கனவே அறிவித்தபடி குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல அனுமதிக்கப்படும்" என்று கூறி அந்த வழித்தடங்கள் குறித்து இரு வரைபடங்களைத் தாக்கல் செய்தார்.
அப்போது ஆம்னி பஸ்கள் உரிமையாளர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் விஜய் நாராயண், "கோயம்பேடு பேருந்து நிலையம் சுற்றுவட்டாரத்தில்தான் ஆம்னி பஸ் நிறுவனங்களின் பணிமனை உள்ளன. அங்கு, பயணிகள் அமர்வதற்கும், பயணிகள் பஸ்களில் ஏறுவதற்கும் வசதிகள் உள்ளன. தற்போது, பயணிகளே இல்லாமல், பஸ்களை கோயம்பேடு பணிமனைக்கு கொண்டு செல்ல அரசு அனுமதி அளிக்கிறது அத்துடன், கோயம்பேடு அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த பயணிகளை பணிமனையில் வைத்து பஸ்களில் ஏற்றுவதற்கும், இறங்குவதற்கும் அனுமதி வேண்டும்" என்று வாதிட்டார். மேலும், எந்தெந்த வழிகளில் எல்லாம் தென்மாவட்டம் செல்லும் ஆம்னி பஸ்களை அனுமதிக்க வேண்டும் என்பதை தனது வாதத்தின் போது அவர் குறிப்பிட்டார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் , "மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கைகளை ஏற்றால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உருவாக்கியதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும். தென் மாவட்டம் செல்லும் பஸ்களால் கிண்டி, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டுதான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டது. மேலும், ஆம்னி பேருந்துகளுக்காக முடிச்சூரில் 5 ஏக்கர் பரப்பில் அனைத்து வசதிகளுடன் பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மார்ச் மாதம் இந்த நிலம் ஒப்படைக்கப்பட்டு விடும்" என்றார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவில் கூறியுள்ளதாவது: "கிளாம்பாக்கம் பஸ் நிலையம் முழுமையான பயன்பாட்டுக்கு வந்த பின்னர், ஆம்னி பஸ்களுக்கும் முடிச்சூரில் பணிமனை மாற்றப்பட்ட பின்னர், கோயம்பேட்டிலிருந்து பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முடிவுக்கு வந்துவிடும். மேலும் கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பஸ்கள் பணிமனைகள் பயணிகள் வசதிகளுக்காக தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கலாம். அதேபோல் போரூர் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளை கண்டிப்பாக ஏற்ற வேண்டும்.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள் அனைத்தும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்ற வேண்டும். இறக்கியும் விட வேண்டும். ஆன்லைனிலும், பஸ்களுக்கான மொபைல் ஆப்பிலும் பயணிகளை போரூர், சூரப்பட்டு தவிர வேறு எங்கும் ஏற்றவோ இறக்கவோ மாட்டாது என தெளிவாக வேண்டும். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த இடைக்கால உத்தரவு தொடர வேண்டும்" என்று நீதிபதி கூறினார். மேலும் இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் 15-ம் தேதி மீண்டும் நடைபெறும் என்றும் அப்போது விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி மஞ்சுளா தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.
சென்னையில் ஆம்னி பஸ்ஸில் செல்வோர் கவனிக்க வேண்டிய மாற்றங்கள் என்னென்ன: சென்னையில் கிளாம்பாக்கத்தை தவிர இனி சூரப்பட்டு சுங்கச்சாவடியிலும், போரூர் சுங்கச்சாவடியிலும் பயணிகள் ஆம்னி பேருந்துகளில் ஏறவும் இறங்கவும் முடியும். கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளில் பயணிகள் இனி ஏறவும் முடியும்.. இறங்கவும் முடியும். ஆனால் வண்டலூர் கூட போக முடியாது.. பெருங்களத்தூர் போக முடியாது.. தாம்பரம் , கிண்டி, பல்லாவரம், வடபழனி என எந்த வழித்தடத்தில் உள்ளவர்களும் சென்னைக்குள் ஆம்னி பேருந்துகளில் ஏறவோ, இறங்கவோ முடியாது. ஏனெனில் சென்னையின் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் வாயிலில் உள்ள வெளிவட்ட சாலை வழியாக பேருந்துகள் நேரடியாக போரூர் சுங்கச்சாவடியை கடந்து கோயம்பேட்டிற்கு நேரடியாக இறங்கிவிடும். இதனால் ஆம்னி பேருந்துகளில் கோயம்பேடு செல்வோருக்கு தற்காலிகமாக நிவாரணம் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications