விஜய்யின் தலைக்கு மேல் கத்தி.. முதல்வராக பதவியேற்பதில் சிக்கல்? 116 எம்எல்ஏக்கள் ஆதரவே உள்ளது?
சென்னை: விஜய் தனக்கு பெரும்பான்மை இருப்பதாக ஆளுநரை மூன்றாவது முறையாக சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கேட்டு உள்ளார். ஆனால் அவரிடம் 116 எம்.எல்.ஏக்கள் ஆதரவே இருப்பதாக தெரிகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் இந்திய கம்யூனிஸ்டு மட்டுமே ஆதரவு கடிதத்தினை வழங்கியுள்ளது. விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் விஜய்க்கு ஆதரவு கடிதம் வழங்கவில்லை என்றே தெரிகிறது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் தவெகவுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கவில்லை என கூறியிருக்கிறது. அதே போல் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகருக்கும் இன்னும் அழைப்பு விடுக்கவில்லை. 116 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருப்பதாகவும், இதனால் தான் ஆளுநர் மீண்டும் விஜய்யை பதவியேற்க அழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் விஜய்க்கு பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே நாளை விஜய் பதவியேற்பு விழா நடக்குமா என்ற சந்தேகம் எழுந்து வருகிறது. எப்படி ஆயினும் ஆளுநர் ஆட்சி அமைய விடாமல் கடைசி நேரத்தில் விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு அளிக்கும் என கூறப்படுகிறது. ஸ்டாலினை சந்தித்த பின் இதனை அவர்கள் முறையாக அறிவிப்பார்கள் என்றும் பார்க்கப்படுகிறது.
விஜய்யின் தவெகவுக்கு (108) காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்டு (2), மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு (2) ஆதரவு அளித்துள்ளதால் தற்போது விஜய் ஆட்சி அமைக்க பெரும்பான்மை 116 ஆகவே உள்ளது. இந்திய முஸ்லீம் லீக் (2) விசிக (2) ஆதரவு அளிப்பதாக கூறப்பட்டாலும் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
விஜய்க்கு பெரும்பான்மை இல்லை
தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக வென்றது. 108 தொகுதிகளில் தவெக வென்றது. அந்த கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை இல்லை என்பதால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து திமுக கூட்டணி கட்சிகளிடம் இருந்து விஜய் ஆதரவு கோரினார்.
ஆட்சி அமைப்பதில் இழுபறி
திமுக கூட்டணியில் முக்கிய கட்சியாக இருந்த காங்கிரஸ் தவெகவிற்கு ஆதரவு அளித்தது. இதன் மூலம் அந்த கட்சிக்கு 113 கிடைத்தது. எனினும், பெரும்பான்மைக்கு 118 என்ற எண் கிடைத்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும் என்று ஆளுநர் ஆர்லேகர் கூறினார். இதனால் விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
118 என்ற மேஜிக் எண்ணை பெறுவதற்காக கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் தவெக ஆதரவு கேட்டது. ஆனால் இந்த கட்சிகளிடம் திமுகவும் ஆதரவு கோரியது. திமுக வெளியில் இருந்து ஆதரிக்க அதிமுக ஆட்சி அமைக்க முயற்சிப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு மத்தியில் இடதுசாரிகள் மற்றும் விசிக முடிவு எடுப்பதில் இழுபறி நீடித்தது வந்தது.
திக் திக்குடன் காத்திருந்த தவெகவினர்
இதனால் தவெகவினரும் திக் திக் மனநிலையுடன் காத்திருந்தனர். மற்றொரு பக்கம் அதிமுக எம்.எல்.ஏக்களை புதுவையில் சென்று சந்தித்த எடப்பாடி பழனிசாமி பொறுத்து இருங்கள் நல்ல செய்தி வரும் என்று கூறினார். இதனால், தமிழக அரசியலில் ஒவ்வொரு நொடியும் பரபரப்பு திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டு இருந்தது.


Click it and Unblock the Notifications
