இதுதான் அம்மாவின் வழிவந்த ஆட்சிக்கு இலக்கணமா...? சொல்வது ஒன்று; செய்வது ஒன்று -கே.எஸ்.அழகிரி
சென்னை: ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவரால் நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் இருப்பது என்ன நியாயம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வினவியுள்ளார்.
மேலும், இதுதான் அம்மாவின் வழிவந்த ஆட்சிக்கு இலக்கணமா? என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் நடவடிக்கைகள் சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளது எனக் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பகுதிநேர ஆசிரியர்கள்
தமிழக அரசுப் பள்ளிகளில் 16,549 பகுதிநேர ஆசிரியர்களை 5,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமித்து, தற்போது 7,700 ரூபாய் தொகுப்பூதியத்தோடு 10 ஆண்டுகளாக பணியாற்றுகின்றனர். ஆனால் இவர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் 10 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

பல போராட்டங்கள்
பணி நிரந்தரம் செய்யாத நிலையில், மாதச் சம்பளம், போனஸ், வருடாந்திர ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு, இறந்தவர் குடும்ப நலநிதி, காப்பீடு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதது மனிதநேயமற்ற நடவடிக்கையாகும். பகுதிநேரமாக இருந்தாலும் கூட, ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகாவது தங்களுக்கு பணிநிரந்தரம் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் தான் இந்த பணியில் அனைவரும் சேர்ந்தார்கள். ஆனால், அதன்பின் 10-வது கல்வியாண்டு தொடங்கிய போதிலும் கூட பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதற்காக பலவகையான போராட்டங்களை நடத்தியும் தமிழக அரசு இவர்களது கோரிக்கையை ஏற்க தயாராக இல்லை.

வாழ்வாதாரம் பாதிப்பு
அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் தட்டுப்பாடு இருப்பதால், பகுதிநேர ஆசிரியர்களை ஈடுபடுத்தி, ஆசிரியர் இல்லாத வகுப்புகளை கவனித்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தப் படுகின்றனர். இவ்வாறாக, முழுமையாக ஒரே பள்ளியில் பயன்படுத்திக் கொள்வதற்காகவே பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பணி தரப்படுவதில்லை. சம்பளத்தையும் உயர்த்தாமல், அதற்கான வாய்ப்புகளையும் மறுப்பது வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலாகும்.

அறிவித்து 3 ஆண்டுகள்
மேலும், கடந்த 2017ஆம் ஆண்டு சட்டசபையில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவிப்பு செய்து மூன்றாண்டுகள் கடந்த நிலையில், இதுநாள்வரை நடைமுறைப்படுத்தவில்லை. இனியும் காலம் தாழ்த்தாமல் உரிய தீர்வுகாண தமிழக அரசு முயலவேண்டும்.

அம்மா ஆட்சி?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நியமித்த பகுதிநேர ஆசிரியர்களை எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் நிரந்தரம் செய்யாமல் இருப்பது என்ன நியாயம்? இதுதான் அம்மாவின் வழிவந்த ஆட்சிக்கு இலக்கணமா? எனவே, மனிதாபிமான உணர்வோடு கடந்த 10 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களாக ரூ. 7,700 சம்பளத்தில் பணியாற்றிவரும் 12,000 பேரை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications