சின்னத்திரை படப்பிடிப்பு விவகாரம்... முதல்வர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன் -குஷ்பு
சென்னை: சின்னத்திரை படப்பிடிப்புகளை உரிய நெறிமுறைகளை பின்பற்றி தொடங்குவதற்கு அரசு அனுமதி தர வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் நடிகை குஷ்பு கோரிக்கை வைத்துள்ளார்.
Recommended Video
குஷ்புவின் கோரிக்கையை கேட்டறிந்த அமைச்சர், இது தொடர்பாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், அதன் பின்னர் ஆலோசித்து முடிவை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளான நடிகை குஷ்பு மற்றும் சுஜாதா விஜயகுமார் ஆகியோர் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய குஷ்பு, சின்னத்திரை படப்பிடிப்புகளை அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் தொடங்க தாங்கள் ஆயத்தமாக இருப்பதாகவும், இதற்கான அனுமதி கோருவதற்காக அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்ததாகவும் தெரிவித்தார். முதலமைச்சர் இந்த விவகாரத்தில் நல்ல முடிவை எடுப்பார் என தனக்கு நம்பிக்கை உள்ளதாக கூறினார்.
தொலைக்காட்சி சீரியல்களில் கதை கொஞ்சம் மாறக்கூடும் என்றும், ஏனெனில் முன்பை போல் அனைத்து கலைஞர்களையும் வைத்து படப்பிடிப்பு நடத்த முடியாது என்பதால் கதைக்கு தேவையான முக்கிய கதாபாத்திரங்களை மட்டும் வைத்து படபிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாகவும், மக்களின் நலன் கருதியே சில விவகாரங்களில் அரசு கெடுபிடி காட்டுவதாகவும் கூறினார். கொரோனாவை ஒழிக்க அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், மக்கள் கூட்டம் சேருவதை காணும் போது தனக்கு வருத்தமாக இருப்பதாக தெரிவித்தார். இன்னும் சில நாட்களுக்கு ஒவ்வொருவரும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பது தனது தனிப்பட்ட தாழ்மையான வேண்டுகோள் எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications