கொரோனா நோயாளி ஒருவர் கூட இல்லாத நாட்டின் ஒரே பகுதி.. லட்ச தீவுகள் யூனியன் பிரதேசம் தப்பியது எப்படி?
சென்னை: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது, சுமார் 10 லட்சம் என்ற அளவுக்கு நெருங்கி விட்டது. அப்படி இருந்தும், இந்தியாவின் ஒரு பிராந்தியம் இதுவரை ஒரு நோயாளியைக் கூட பதிவு செய்யவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?
அந்தப் பிராந்தியத்தின் பெயர் லட்சத்தீவுகள். மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிடக்கூடிய புள்ளிவிவரத்தில், லட்சத்தீவு பகுதியில் வைரஸ் பாதிப்பு பதிவாகவில்லை.
எனவேதான் லட்சத்தீவு நிர்வாகத்தின் சார்பில் மத்திய அரசுக்கு சமீபத்தில் ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டது.

தனிமைப்படுத்துதல்
தங்கள் பிராந்தியத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. லட்சத்தீவு யூனியன் பிரதேசம் 64,473 மக்கள் தொகை கொண்ட பகுதி. நீண்டகால தனிமைப்படுத்துதல் விதிமுறை, கடுமையான கட்டுப்பாடுகள் போன்றவை லட்சத் தீவு பகுதியில், கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க முதன்மைக் காரணங்களாகும்.

குறைந்த பரிசோதனை
இதுவரை லட்சத்தீவு 61 பேரை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலின் நெறிமுறைகளின்படி இந்த பரிசோதனை நடந்து உள்ளது. அங்கு அறிகுறி உள்ளோருக்கு மட்டும் பரிசோதனை நடக்கிறது. இதில்தான் ஒருவருக்கும் உறுதிசெய்யப்படவில்லை.
லட்சத்தீவு சுகாதாரத் துறை செயலாளராக பதவி வகிப்பவர் டாக்டர் சுந்தரவடிவேலு. தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரி ஆகும்.

கொச்சியை சார்ந்து
லட்சத்தீவுகள் என்பது மொத்தம் 36 தீவுகளை உள்ளடக்கிய பகுதி. கேரளாவின் கொச்சி நகரத்தை அனைத்து வகை அடிப்படை தேவைகளுக்கும் இது சார்ந்து இருக்கிறது. குறிப்பாக, மருத்துவ வசதி மற்றும் அடிப்படை பொருட்களுக்கான வினியோகம் உள்ளிட்ட அனைத்துக்கும் கொச்சி நகரத்தை சார்ந்து இருக்கிறது.

பரிசோதனைகள்
கொச்சி நகரத்திலிருந்து லட்சத்தீவு செல்வோர் தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அனுப்பப்படுகிறார்கள். இதுவும், அங்கு வைரஸ் பரவல் இதுவரை கண்டறியப்படாததற்கு முக்கிய காரணம். மற்றொரு பக்கம், மிகக் குறைந்த அளவுக்கான பரிசோதனைகள் நடந்து இருக்கின்றன என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
Recommended Video

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பரிசோதனைகள் செய்யப்படாத, அதாவது அறிகுறி இல்லாத நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதையும், மறுக்க முடியாது. ஆனால் அரசின் அதிகாரப்பூர்வ தகவல்படி, லட்சத்தீவுகள் என்பது கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத இந்தியாவின் ஒரே யூனியன் பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications