“இவருக்குத்தான் அங்க ரிசார்ட் இருக்குனு நினைக்கிறேன்”.. திமுக எம்.எல்.ஏவை கலாய்த்த செந்தில் பாலாஜி!
சென்னை: "எம்.எல்.ஏவுக்கு அங்கு ரிசார்ட் இருக்கு என நினைக்கிறேன்.." என தமிழக சட்டப் பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிரித்தபடி சொன்னது சட்டசபையில் கலகலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரிசார்ட்டுகளில் மின்சாரம் தடைபடுகிறது என கோரிக்கை வைத்த அணைக்கட்டு திமுக எம்.எல்.ஏ ஏ.பி. நந்தகுமாரை அமைச்சர் செந்தில் பாலாஜி கலாய்த்ததால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

சட்டசபை கூட்டத்தொடர்
தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அதற்கு அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்தன. தொடர்ந்து மார்ச் 24 ஆம் தேதி முதல் துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. துறை அமைச்சர்கள் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம், சட்டசபையில் பதாகையை காட்டிய அதிமுக எம்.எல்.ஏக்கள் 13 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நேற்றைய தமிழக சட்டசபை நிகழ்வின்போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கறுப்பு சட்டை அணிந்து அவை நடவடிக்கையில் பங்கேற்றனர். மேலும் மக்கள் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.
அதிமுகவினர் கறுப்பு சட்டை
இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கறுப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்துள்ளனர். சபாநாயகர் அப்பாவு எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும் பிரதான எதிர்க்கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
திமுக எம்.எல்.ஏ எழுப்பிய கேள்வி
இந்நிலையில் இன்று சட்டசபை விவாதத்தின்போது திமுகவை சேர்ந்த அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், "எனது அணைக்கட்டு தொகுதியில் உள்ள மலைக்கிராமங்களில் மின்சாரம் தடைபடும்போது, மின்சாரம் திரும்ப கிடைக்க 2 - 3 நாட்கள் ஆகிறது. கேபிள்கள் அமைத்து மின்சாரம் தடையின்றி கிடைக்க வசதி செய்ய வேண்டும்.
ஏலகிரியை ஏழைகளின் ஊட்டி என்று சொல்வார்கள். ஏலகிரியில் 200 ரிசார்ட்டுகள் உள்ளன. மின் தடை ஏற்பட்டால் அங்கு உள்ள ரிசார்ட்கள் அனைத்திலும் மின்சாரம் தடைபடுகிறது. எனவே அங்கு துணை மின் நிலையம் அமைத்துத் தர முன்வரவேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.
செந்தில் பாலாஜி பதிலால் கலகலப்பு
இதையடுத்து எழுந்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, "உறுப்பினருக்கு அங்கு ரிசார்ட் இருக்கிறது என்று நினைக்கிறேன்" என சிரித்தபடியே கூறினார். அவரது கலகல பேச்சால் சபாநாயகர் அப்பாவு மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் வாய்விட்டுச் சிரித்தனர்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "வேலூர் மாவட்டத்தில் 8 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கவும், 2 துணை மின் நிலையங்களை தரம் உயர்த்தவும் அனுமதி வழங்கியுள்ளார். அணைக்கட்டு தொகுதியில் 3 பணிகளுக்காக அனுமதி பெறப்பட்டுள்ளது. கூடுதலாக ஏலகிரி மலைப் பகுதியில் ஒரு துணை மின் நிலையம் கோரிக்கை வைத்துள்ளனர். அரசு ஆய்வு செய்து தேவை ஏற்படின் அமைக்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
கேபிள் வழித்தடம் மூலம் மின்சாரம்
மேலும், மலைக் கிராமங்களுக்கு கேபிள் வழித்தடம் மூலமாக மின்சாரம் வழங்கும் திட்டம் குறித்து, மின் வாரியத்தின் நிதி நிலைமைக்கு ஏற்ப அரசு பரிசீலிக்கும் என்றும் தெரிவித்தார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.












Click it and Unblock the Notifications