பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை.. அடங்க மறு, அத்துமீறு என பேசும் தலைவர்களால் கொடூரம்: அன்புமணி ராமதாஸ்
சென்னை: "அடங்க மறு.. அத்துமீறு.. என்று பேசும் தலைவர்கள் வட தமிழகத்தில் திட்டமிட்டு வன்முறையை உருவாக்கி வருகின்றனர்." என பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டு உயிரிழந்த பாமக உறுப்பினர் தமிழரசன் உடலை பார்வையிட்ட பின் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் வந்தாலே தமிழகத்தின் இரண்டு பெரும்பான்மைச் சாதிகளையும் அடித்து கொள்ள வைத்து வாக்கு வாங்குவதுதான் திராவிட மாடலா என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை
ராணிப்பேட்டை மாவட்டம் நெல்வாய் கிராமத்தில் ஒரு கும்பலால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தாக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த இளைஞர் தமிழரசன் உயிரிழந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தமிழரசனின் உடலை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டு, பலியான தமிழரசன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், "கடந்த வாரம் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகேயுள்ள நெல்வாய் கிராமத்தில் 2 பாமக தொண்டர்களை வன்முறைக் கும்பல் ஒன்று கடுமையாக தாக்கி பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளது. அதில் தமிழரசன், விநாயக கனபதி என இருவர் உயிருக்கு போராடும் நிலையில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்கப்பட்டனர்.
அன்புமணி பேட்டி
நேற்று மாலை தமிழரசன் இறந்து விட்டார். மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. 21 வயது இளைஞரான தமிழரசன் இறப்பால் நாங்கள் மிகுந்த சோகத்தில் உள்ளோம். இன்னொரு இளைஞர் உயிருக்குப் போராடி வருகிறார். பெட்ரோல் ஊற்றி கொளுத்தும் துணிச்சல், தைரியம் அந்த பகுதியில் சிலருக்கு இருக்கிறது. இதற்கு காரணமான 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஏதோ தனிப்பட்ட விரோதத்தால் நடந்த சம்பவம் இல்லை.
கடந்த சில மாதங்களாக வட தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. சில தலைவர்களின் தூண்டுதலால் இதுபோன்ற வன்முறை நடக்கிறது. இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி படித்து முன்னேறுங்கள், வழக்குகள் உங்கள் மீது வரக்கூடாது என எங்கள் இளைஞர்களுக்கு நாங்கள் சொல்கிறோம்.
அடங்க மறு, அத்து மீறு என்கிறார்கள்
ஆனால் அடங்க மறு, அத்துமீறு, திருப்பி அடி, வெட்டு என்று சொல்லும் ஒருசில தலைவர்களால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு இதுபோன்ற கொடூரமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. காவல்துறையின் கையாலாகாத்தனமும் இதற்கு காரணம். கைதான 6 பேரும் திருமால்பூர் எனும் நெல்வாய் அருகிலுள்ள கிராமத்தை சார்ந்தவர்கள் , கைதானவர்களில் ஒருவர் விசிக உறுப்பினர் , மற்ற 5 பேர் விசிக ஆதரவாளர்கள்.
கஞ்சா விற்பது அந்த இளைஞர்களின் தொழிலாக உள்ளது. காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர்தான் இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும். இறந்த தமிழரசனின் தந்தையும் சில ஆண்டுகளுக்கு முன் தலையில் அடித்து சிலரால் கொல்லப்பட்டுள்ளார். இறந்த தமிழரசன் குடும்பத்திற்கு முதலமைச்சர் 25 லட்சம் இழப்பீடு வழங்கி , தமிழரசன் தம்பிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
திராவிட மாடல் தேர்தல் யுக்தியா?
தேர்தல் நெருங்கினாலே 2 சமூகத்தையும் அடித்துக்கொள்ள வைத்து வாக்கு வாங்குவதுதான் திராவிட மாடலின் தேர்தல் யுக்தியா? தமிழ்நாட்டில் பெரும்பான்மை சமூகமான 2 சமுதாயமும் வளர்ச்சி அடையாமல் அதலபாதாளத்தில் உள்ளது.
30 ஆண்டுக்கு முந்தைய வட தமிழ்நாடு எப்படி இருந்தது என அனைவருக்கும் தெரியும். தினமும் கலவரம் நடந்தது. அதெல்லாம் வேண்டாம் என்றுதான் வளர்ச்சியை நோக்கி எங்கள் தொண்டர்களை அழைத்து செல்கிறோம். இதுபோன்ற சம்பவம் இனி எங்கும் நடக்க கூடாது.
இந்த பிரச்சனை அடுத்தகட்டத்திற்குச் செல்லக் கூடாது என நான் நினைக்கிறேன். திருமால்பூர் கிராமத்தில் காவல்துறைக்கு தெரியாமல்தான் கஞ்சா விற்பனை நடக்கிறதா? தமிழரசன் உடலை வாங்குவது குறித்து அவரது குடும்பத்தினர்தான் முடிவு செய்ய வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications