ஆயுள் காப்பீடு எடுப்பவர்களுக்கு செக்.. அடியோடு நீக்கப்படும் சிறிய பாலிசிகள்? ஷாக் நடவடிக்கை
சென்னை: இந்தியாவில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களான எல்ஐசி, எச்டிஎப்சி லைஃப், எஸ்.பி.ஐ லைஃப் உள்ளிட்டவை தங்கள் பாலிசிகளின் குறைந்தபட்ச மற்றும் சராசரி மதிப்பை உயர்த்தி வருகின்றன. நீண்ட கால பாலிசி புதுப்பித்தலை ஊக்குவிக்கவும், பாலிசி ரத்துகளை குறைக்கவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. இதனால் பல ஏழைகள் பாலிசி எடுக்க முடியாத கடுமையான சூழல் ஏற்படலாம்.
குறைந்த மதிப்புள்ள பாலிசிகள் அடிக்கடி ரத்தாவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. சிறிய பாலிசிகளை வாங்கும் ஏழை வாடிக்கையாளர்கள், சில மாதங்களுக்குப் பிறகு பிரீமியத் தொகையைச் செலுத்த முடியாமல் பாலிசியைக் கைவிடுவதால் இந்த நிறுவனங்கள் இவ்வாறு செய்துள்ளன. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக சிறிய பாலிசி ஆப்ஷன்கள் நீக்கப்பட உள்ளன.

குறைந்த மதிப்புள்ள பாலிசிகள்
குறைந்த மதிப்புள்ள பாலிசிகள் விரைவில் கைவிடப்படுவதால், காப்பீட்டு நிறுவனங்களின் வணிகமும், பாலிசிதாரரின் பாதுகாப்பும் பாதிக்கப்படுகின்றன. உதாரணமாக, ஜூன் காலாண்டில் எல்ஐசியின் சராசரி பாலிசி மதிப்பு 23% அதிகரித்துள்ளது. இது பாலிசி கட்டமைப்பில் செய்யப்பட்ட மாற்றங்களால் சாத்தியமானது.
வாடிக்கையாளர்களின் நீண்ட கால அர்ப்பணிப்பை அளவிடும் முக்கிய அம்சமாக பாலிசி நிலைத்தன்மை (Persistency) கருதப்படுகிறது. குறைந்தபட்ச மற்றும் சராசரி பாலிசி மதிப்பை உயர்த்துவதன் மூலம், நிறுவனங்கள் பாலிசி நிலைத்தன்மையை மேம்படுத்தவும், ஆரம்பகால ரத்துகளைக் குறைக்கவும், நீண்ட கால வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் திட்டமிட்டுள்ளன.
பாலிசி நிறுவனங்கள் புதிய திட்டம்
இது நிறுவனங்களின் நிதித் திட்டமிடலையும், பாலிசிதாரர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும். மேலும், வலுவான மற்றும் நிலையான பாலிசி போர்ட்ஃபோலியோவை உருவாக்க உதவும் என நம்பப்படுகிறது. இந்த மாற்றத்தால், ஆயுள் காப்பீடு வாங்க நினைக்கும் பொதுமக்கள் இனி அதிக பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். ஏனெனில், மிகக் குறைந்த மதிப்புள்ள பாலிசிகளை காப்பீட்டு நிறுவனங்கள் இனி ஊக்குவிக்கப்போவதில்லை.
முன்னதாக ₹50,000 முதல் ₹1 லட்சம் வரையிலான குறைந்த மதிப்புள்ள பாலிசிகளைத் தேர்ந்தெடுத்தவர்கள், இனி அத்தகைய விருப்பங்களைக் குறைவாகவோ அல்லது முற்றிலுமாக இல்லாமலோ பார்க்கக்கூடும். அதாவது அதுபோன்ற பாலிசி ஆப்ஷன்கள் இனி இருக்காது. அதேசமயம், அதிக மதிப்புள்ள பாலிசிகளை வாங்கக்கூடிய வசதி படைத்தவர்கள் நீண்ட கால சேவையைப் பெறுவார்கள். அவர்களுக்கு கூடுதல் ஆப்ஷன்கள் வழங்கப்படும் .
பாலிசி ஜிஎஸ்டி குறைகிறது
அதே சமயம் காப்பீட்டு பிரீமியங்களுக்கான ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) வரியை தற்போதைய 18% இலிருந்து 5% ஆக அல்லது பூஜ்ஜியமாக குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முன்மொழிவு ஜிஎஸ்டி 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது மறைமுக வரி அமைப்பை எளிதாக்குவதையும், பொதுமக்களின் சுமையைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஜிஎஸ்டி அடுக்கில் வர இருக்கும் புதிய வரி முறை 5% மற்றும் 18% என்ற இரண்டு முக்கிய வரிகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆடம்பரப் பொருட்கள் மற்றும் மது, புகையிலை போன்ற பொருட்களுக்கு சிறப்பு 40% வரி விதிக்கப்பட உள்ளது. இது தற்போதுள்ள 12% மற்றும் 28% வரிகளில் இருந்து மாறுபட்டு, அவை புதிய அமைப்பின் கீழ் நீக்கப்படும்.












Click it and Unblock the Notifications