9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்: மா.செ.க்களுடன் ஸ்டாலின் ஆலோசனை- கூட்டணியில் சேர தேமுதிக பகீரத முயற்சி?
சென்னை: 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா? என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர் ஜூன் 25-ந் தேதி முதலாவது மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் செப்டம்பர் 15-ந் தேதிக்குள் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று மீண்டும் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

உள்ளாட்சி தேர்தல் வியூகம்
உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் தென்காசி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி உட்பட 9 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் என 40 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அத்துடன் சட்டசபை தேர்தலில் 9 மாவட்டங்களின் செயல்பாடுகள், சர்ச்சைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டதாக அண்ணா அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இணையுமா? என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

திமுக- தேமுதிக நெருக்கம்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில்தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாவட்டங்களில் தேமுதிகவுக்கும் செல்வாக்கு இருக்கிறது. அதனால் திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா? என்கிற கேள்வியும் எதிர்பார்ப்பும் நீடித்து வருகிறது. முன்னதாக சட்டசபை தேர்தலில் வென்ற உதயநிதி ஸ்டாலின், விஜயகாந்த் வீட்டுக்கு சென்று அவரிடம் வாழ்த்துப் பெற்றார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், மைத்துனர் சுதீஷ் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். இதன் அடுத்த கட்டமாக விஜயகாந்த் வீட்டுக்கே சென்று நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனால் திமுகவுடன் தேமுதிக நெருங்கி வருவதாக கூறப்பட்டது.

கூட்டணிக்கு தேமுதிக தீவிரம்
தற்போதைய நிலையில் மிகவும் பலவீனப்பட்டு இருக்கிறது தேமுதிக. திமுகவுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் தேமுதிகவை உயிர்ப்பித்துவிட வாய்ப்பிருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற முனைப்பு விஜயகாந்த் குடும்பத்தினரிடம் இருக்கிறது. ஆனால் திமுக அணியில் தேமுதிகவை சேர்ப்பதற்கான சாத்தியங்கள் குறித்தும் கேள்விகள் இருக்கின்றன. ஏனெனில் திமுக கூட்டணியில் ஏற்கனவே ஏராளமான கட்சிகள் இருக்கின்றன. சட்டசபை தேர்தலின் போது கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகள்தான் கொடுக்கப்பட்டன. ஒருசில சிறிய கட்சிகளுக்கு தொகுதிகள் கூட ஒதுக்கப்படவும் இல்லை. திமுக அணியில் கட்சிகள் வரிசை கட்டி நிற்கும் நிலையில் தேமுதிகவை உள்ளே இழுத்துப் போட்டு புதிய குடைச்சல் தேவைதானா? என்கிற இயல்பான கேள்வியும் திமுக தலைவர்களிடம் இருக்கிறது.

பாமகவின் பதற்றம்
ஆனாலும் தேமுதிக தரப்பில் எப்படியாவது திமுக கூட்டணிக்குள் நுழைந்துவிட வேண்டும் என்கிற பகீரத பிரயத்தன முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. திமுகவிடம் இருந்து எப்படியாவது க்ரீன் சிக்னலை வாங்கிவிட முடியாதா? என்கிற பெரும் எதிர்பார்ப்பில் தேமுதிக இருந்து வருகிறது. இதனிடையே திமுக அணியில் தேமுதிக சேர்ந்துவிடக் கூடாது; அப்படி சேர்ந்து தேமுதிக உயிர்பெற்றுவிட்டால் தங்களுக்கு சவாலாக இருக்கும் என கவலைப்படுகிறதாம் பாமக. இது தொடர்பாக நாம் ஏற்கனவே விரிவான செய்தியைப் பதிவும் செய்திருந்தோம். திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகனை தொடர்பு கொண்டு இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியும் இருந்தார். அப்போது, இருக்கிற கட்சிகளையே சமாளிக்க முடியவில்லை என்கிற தொனியில் துரைமுருகன் தந்த பதிலில் டாக்டர் ராமதாஸ் சமாதானம் அடைந்திருந்தார். இருந்தபோதும் தேமுதிகவை திமுக கூட்டணியில் சேர்க்க கூடாது என்கிற பாமகவின் லாபி தொடரவே செய்கிறதாம்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications