அதிமுக கொடுக்கும் ஆஃபர்.. தேமுதிக, பாமகவை கூட்டணிக்குள் இழுக்க திட்டம்.. வியூகம் பலிக்குமா
சென்னை: லோக்சபா தேர்தல் களம் பரபரப்பாக உள்ள நிலையில் அதிமுக கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை ஆரம்பித்து விட்டது. தேமுதிக, பாமகவை கூட்டணிக்குள் இழுத்து வலிமையான கூட்டணி அமைக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளது. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. எனவே நாடு முழுவதும் அரசியல் களத்தில் அனல் பறக்கிறது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை கடந்த வாரமே தொடங்கி விட்டது. தொகுதி பங்கீடு முடிந்தால்தான் வேட்பாளரை இறுதி செய்ய முடியும்.

அதிமுகவில் யாருடன் கூட்டணி என்பதே இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. கடந்த லோக்சபா தேர்தலை அதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகளை இணைந்து எதிர்கொண்டனர். தேனி தொகுதி தவிர வேறு எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. அதன்பின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலிலேயே அதிமுக பாமக உடனான கூட்டணி முறிந்துவிட்டது. அதன்பின் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று பாமக கூறி வருகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது கூட்டணியில் இருந்த தேமுதிக இட ஒதுக்கீடு பிரச்சினையால் கூட்டணியை விட்டு வெளியேறி அமமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக பாஜக இடையேயான கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. எப்போதும் பாஜக உடன் கூட்டணி இல்லை என்று கூறி வருகிறது அதிமுக.
லோக்சபா தேர்தலில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமையாவிட்டால் அதிமுக சிறு கட்சிகளை இணைத்து 40 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அதே நேரத்தில் பிளான் பி ஒன்றையும் அதிமுக கையில் வைத்துள்ளது. அதாவது தேமுதிக, பாமகவையும் கூட்டணியில் இழுத்து அவர்களுக்கு ஆஃபர் வழங்க திட்டமிட்டுள்ளது.
இதனையடுத்து இன்றைய தினம் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை தேமுதிக, பாமக உடன் அதிமுக குழுவினர் தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகின. எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்று கூட்டணி குழுவினர் பேசி வருவதாகவும் தகவல் வெளியானது. அந்த செய்தி வெளியான அதே நேரத்தில் பாமக தரப்பில் இருந்து ஜி.கே. மணி அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். கூட்டணி குறித்து யாருடனும் பேசவில்லை என்ற செய்தி வெளியானது.
அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய ஜெயக்குமாரிடம், பாமக, தேமுதிக உடன் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா? என்ற கேள்விக்கு, கொள்கை முடிவை நான் கூற முடியாது. தேர்தல் நேரத்தில் பலர் எங்களோடு பேசுகிறார்கள் அது குறித்து பேச இது நேரம் இல்லை என்று கூறினார்.
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலை தனியாக சந்தித்த அம்மா வென்றார்கள். எங்கள் நிலைப்பாடு மாநில உரிமை சார்ந்த விஷயம். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளது. யார் தவறு செய்தாலும் சுட்டிக்காட்டி உரிமையை பெற்றுத் தருவதுதான் அதிமுகவின் கொள்கை என்று கூறியுள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கும் கடைசி நிமிடம் வரைக்கும் அரசியல் அரங்கில் எதுவும் நிகழ வாய்ப்பு உள்ளது. யாருடன் யார் இருப்பார்கள் யார் விலகுவார்கள். புது கூட்டணி மலருமா? அதிமுக , திமுக கூட்டணி தவிர்த்து புதிதாக அணி உருவாகுமா என்று இன்னும் சில நாட்களில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications