30 தொகுதிகளில் மோடிக்கு செக்! 3 மாநிலங்களில் வீசும் கெஜ்ரிவால் ஆதரவு அலை! தாக்குப் பிடிக்குமா பாஜக?
சென்னை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதால் 30 தொகுதிகளில் பாஜகவின் வெற்றி பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பல நாள்களாக இழுபறியில் இழுத்துக் கொண்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு ஒரு முடிவுக்கு வந்துள்ளது. அவருக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

இந்த உத்தரவை 'இந்தியா'கூட்டணியில் உள்ள கட்சிகள் வரவேற்றுக் கொண்டாடி வருகின்றன. 'ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி' என்று வெடி போட்டு வரவேற்றுள்ளன.
இந்த மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாட்டை முடக்கிவிட வேண்டும் என்றே பாஜக காய் நகர்த்தி வருகிறது என்று பரவலாக ஒரு கருத்து முன்வைக்கப்பட்டு வந்த நிலையில்தான், கெஜ்ரிவால் கைது அவசர அவசரமாக நடந்தேறியது.
இன்றைக்கு ஆம் ஆத்மி ஒரு மாநிலக் கட்சி அல்ல. அந்தக் கட்சி பஞ்சாபில் ஆட்சியில் உள்ளது. டெல்லியை ஆட்சி செய்து வருகிறது. கோவாவில் அதற்கு நல்ல ஆதரவு உள்ளது.
அதைத்தாண்டி குஜராத்தில் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுத்துள்ளது. கடந்த முறை பல தொகுதிகளில் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை குஜராத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் வாக்குகளைப் பெற்றிருந்தனர்.

இந்த முறை அந்தக் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதால், அதன் தாக்கம் வீரியமாக இருக்கும் என்கிறனர். குறைந்தது 4 முதல் 5 தொகுதிகளில் ஆம் ஆத்மி பாஜக வெற்றியைத் தடுக்கும் சக்தியாக இருக்கிறது என்று தேர்தல் வியூகர்கள் பேசி வருகின்றனர்.
சுருக்கமான சொன்னால், வட மாநிலங்களில் ஆம் ஆத்மி ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி போட்ட ஒரு பட்ஜெட்டில் கூட துண்டு விழவில்லை. அத்தனை பட்ஜெட்டும் சக்சஸ்! வரவு செலவு சரிசமமாக உள்ளது. இதைப் போன்ற ஒரு பட்ஜெட்டை வேறு எந்த மாநிலக் கட்சியும் போட்டதே இல்லை.
குஜராத்தை 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் பாஜக அரசு கூட இப்படி ஒரு பட்ஜெட்டை போட்டு காட்டியதில்லை. இதை எல்லாம் உணர்ந்துதான் டெல்லி தலைநகரைக் கைப்பற்ற பாஜக அரசு மறைமுகமாக அமலாக்கத்துறையை வைத்து அரவிந்த் கெஜ்ரிவால் இயக்கத்தை முடக்கத் திட்டமிட்டது என ஒரு பக்கம் புகார் சொல்லப்படுகிறது.

கெஜ்ரிவால் சிறை உள்ளாக இருக்கும் போதே தேர்தலை முடித்து விடலாம் என பாஜக திட்டம் தீட்டியது. தேர்தல் களத்தில் கெஜ்ரிவால் பிரச்சாரம் இல்லாமல் போனதால் அவரது கட்சி தொண்டர்கள் சோர்வடைந்திருந்தனர்.
இந்த நிலையில்தான் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. ஜூன் 1 வரை அவர் சுதந்திரமாக செயல்பட முடியும்.தேர்தல் பிரச்சாரத்திற்குத் தடையில்லை என ஆம் ஆத்மி வக்கீல் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
எனவே இத்தனை நாள்களாக அடக்கி வைத்த ஆத்திரத்தைப் பிரச்சாரத்தில் கொட்டித் தீர்ப்பார் கெஜ்ரிவால். அது உறுதி. ஆகவே. பாஜகவுக்கு அக்னி பரீட்சை காத்துள்ளது என்பது கண்கூடு.
ஆம் ஆத்மி கெஜ்ரிவால் விடுதலையால் புதிய தெம்பு பெறும். பிரச்சாரத்தில் எழுச்சி அலை வீசும். அப்படி ஒரு அலை எழுந்தால் பாஜக கூட்டணிக்குத்தான் மிகப்பெரிய சிக்கல். மோடி தனது பிரச்சார ஸ்டைலையும் மாற்றியாக வேண்டும்.

இதுவரை 2024 மக்களவைத் தேர்தல்கள் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்துள்ளன. கிட்டத்தட்ட 285 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்து விட்டது. 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 13 இல் நடக்க உள்ளது. மொத்தம் 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அடுத்து 20 ஆம் தேதி 5வது கட்டம். அதில் 49 தொகுதிகள். 25 அன்று 6வது கட்ட தேர்தல். அதில் 57 தொகுதிகள். இறுதியாக 7வது கட்ட தேர்தல் ஜூன் 1 அன்று நடக்க உள்ளது. அதில் 57 தொகுதிகள்.
இதை ஏன் சொல்கிறோம் என்றால், இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வரை, அதாவது ஜூன் 1 வரைதான் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. ஆக, அவர் இறங்கி பாஜகவுடன் சரிக்குச் சமமாக மோதலில் ஈடுபடுவார்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கினால் மோசமான முன்னுதாரணமாக மாறிவிடும் என வாதிட்டது அமலாக்கத்துறை எவ்வளவோ வாதிட்டும் ஜாமீன் கிடைத்துள்ளது வழக்கில் மிகப்பெரிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்தது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், "அரவிந்த கெஜ்ரிவால் தரப்பு வாதமே தனது கைது சட்டத்திற்குப் புறம்பாக நடைபெற்றுள்ளது என்பதுதான். அவர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் அப்படித்தான் குறிப்பிட்டிருந்தனர். அவர் தனக்கு ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யவில்லை.
அதாவது பிஎம்.எல்.ஏ சட்டம் 19 ஆவது பிரிவில் யாரையும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்ய முடியாது என்றே விதிமுறை உள்ளது. அந்த அதிகாரம் இ.டி.க்கு கிடையாது. போதுமான ஆதாரங்கள் இருந்தால் கைது செய்யலாம்.
இது கூட சட்டம் புனையப்பட்ட வருடத்திலிருந்தே அதற்கான ஆதாரங்கள் இருக்கவேண்டும்.
அப்படிப் பார்த்தால் கடந்த 2ஆண்டுகள் முன்னதாகவே இ.டியிடம் முறையான ஆதாரங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் அது சட்டப்படி கைது செய்வதாகும்.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக 2 வாக்குமூலங்கள்தான் உள்ளன. ஒன்று புஜி பாபு. அவர்தான் கவிதாவின் பர்சனல் ஆடிட்டர். இன்னொருவர் ரெட்டி. ஒருவர் சிபிஐ வழக்கில் குற்றவாளியாக உள்ளார். அவரே அமலாக்கத்துறையில் சாட்சியமாக உள்ளார்.
இந்த வழக்கை சிபிஐயிடம் இருந்துதான் இடிக்கு கைமாறியது. அப்படி என்றால் ஒரே இந்த வழக்கில் இரண்டு தரப்புக்கும் சாட்சியமாக இருக்க முடியும்? இது மாபெரும் கேள்வியாக இருந்து வந்தது.
அதனால்தான் இந்த கைது சட்ட விரோதம் என்று வாதங்கள் எழுந்தன. அதை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என இ.டி போராடியது. வழக்கை முடிக்கவிடாமல் இழுத்தடிக்க அது முயன்றது.
அதுவும் தேர்தல் அட்டவணை தேதி அறிவிக்கப்பட்ட பிறகு நடந்த கைது என்பதால் பல சந்தேகங்கள் எழுந்தன. அப்படி என்ன அவசரம் இந்த வழக்கில் உள்ளது என்று பல சட்ட வல்லுநர்கள் கேள்வியை முன்வைத்தனர்.
நேற்று அவசர அவசரமாக இ.டி ஒரு இடைக்கால மனுத்தாக்கல் செய்தது. அதை விசாரித்தால், அதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு விளக்கம் அளிக்க அவகாசம் தர முடியாது.
ஆகவே, அந்த மனுவைத் தள்ளுபடி செய்து விட்டது உச்சநீதிமன்றம். இதை இ.டி எதிர்ப்பாக்கவில்லை. இந்த ஜாமீன் என்பது இ.டியை பொறுத்தவரை மிகப்பெரிய அடி என்றே சொல்ல வேண்டும்.
இது மோடிக்கும் அரசியல் ரீதியாக மிகப்பெரிய பின்னடைவுதான்.
குறிப்பாக டெல்லி, ஹரியான, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள 30 தொகுதிகள் பாஜக பின்னடைவைச் சந்திக்கும். அதற்கு அரவிந்த கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீன் அதற்கான பாதிப்பை ஏற்படுத்தும். அவர் மிகத் தீவிரமாகப் பிரச்சாரத்தைக் கையில் எடுப்பார்.
அது போக ஹரியானாவில் இப்போது மாநில அரசுக்கு நெருக்கடி எழுந்துள்ளது. அங்கே பாஜக அரசு அந்தரத்தில் தொங்கிக் கொண்டுள்ளது. அதை நாடே கவனித்து வருகிறது.
சட்ட விரோதமான பணப்பரிவர்த்தனை (pmla act) வழக்கில் ஒருவர் ஜாமீன் கேட்பது கடினம். ஏனென்றால், ஜாமீன் பெறுவதை இந்தச் சட்டம் கடினமாக்கி வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் செந்தில் பாலாஜி, டெல்லியில் மணீஷ் சிசோடியா போன்றவர்கள் இந்த வழக்கை எதிர்கொண்ட போது ஜாமின் தான் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆகவேதான் யாருக்கும் லேசில் ஜாமின் கிடைக்கவில்லை.
கெஜ்ரிவால் வழக்கு 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால், அவர் திடீரென்று முகாந்திரமே இல்லாமல் கைது செய்யப்படுகிறார். அதைத்தான் சட்ட விரோத கைது என்று வாதிடுகிறார் கெஜ்ரிவால்.
கைதே சட்ட விரோதம் என்பதால், மற்ற விசயங்கள் அடிப்பட்டுப் போய்விடுகின்றன. இதுதான் இந்த வழக்கில் உள்ள சட்ட நுணுக்கம்" என்கிறார்












Click it and Unblock the Notifications