அப்பாடா.. இழுபறிக்கு பிறகு கிடைத்துவிட்டது பானை சின்னம்.. வென்றது விடுதலை சிறுத்தைகள் போராட்டம்
சென்னை: சட்ட போராட்டம் மற்றும் நீண்ட இழுபறிக்கு பிறகு வரும் லோக்சபா தேர்தலில் தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ல் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணியில் தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கிறது.

கடந்த 2019 லோக்சபா தேர்தலை போல் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மீண்டும் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளை திமுக ஒதுக்கீடு செய்தது.
கடந்த முறை சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியாக உள்ள திருமாவளவன் மீண்டும் அங்கு போட்டியிடுகிறார். அதேபோல் விழுப்புரம் தொகுதியில் சிட்டிங் எம்பியாக உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமாரும் மீண்டும் அதே தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்திய தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை விடுதலை சிறுத்தைகள் கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சியாக உள்ளது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நிரந்தர சின்னம் என்பது இல்லை. மாறாக ஒவ்வொரு தேர்தலின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தில் சின்னத்தை கேட்டு பெற வேண்டும்.
அதன்படி கடந்த 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிட்ட பானை சின்னத்தை வரும் லோக்சபா தேர்தலில் ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 27 ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்குவது பற்றி உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்ய முடியாது என தெரிவித்தது. கேட்கும் சின்னத்தை வழங்குவதற்கு போதிய அளவிலான ஓட்டு சதவீதம் இல்லை. இதனால் பானை சின்னம் ஒதுக்க முடியாது என தெரிவித்தது.
இதற்கிடையே தான் இன்று வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாளாகும். இன்னும் சற்று நேரத்தில் தமிழ்நாட்டில் தொகுதி வாரியாக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் பதிவு செய்யப்பட்ட கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அதன்படி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாரும் பானை சின்னத்தை கேட்கவில்லை. இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது. இதன்மூலம் வரும் லோக்சபா தேர்தலில் சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் பானை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் சிதம்பரத்திலும், ரவிக்குமார் விழுப்புரத்திலும் போட்டியிட்டபோது ஒருவர் மட்டுமே பானை சின்னத்தில் போட்டியிட்டார். அதாவது திருமாவளவன் மட்டுமே பானை சின்னத்தில் போட்டியிட்டார். மாறாக ரவிக்குமார் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கி வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை திருமாவளவன், ரவிக்குமார் என 2 பேரும் பானை சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications