பாஜக கூட்டணியிலேயே தேமுதிக இல்லையே... எங்களை எப்படி கூப்பிடுவாங்க? பிரேமலதா அடடே விளக்கம்!
சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக இடம்பெறவே இல்லை; ஆகையால் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகள் கூட்டத்துக்கு தேமுதிகவை அழைக்கவில்லை என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுகவையே பின்னுக்கு தள்ளி எதிர்க்கட்சியாக இருந்தது தேமுதிக. ஆனால் தேமுதிக இப்போது இருக்கிற இடம் தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. தேர்தல் நேரங்களில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கூட்டணிக்குள்ளும் கடைசிநிமிடங்கள் வரை பேச்சுவார்த்தை நடத்தி நம்பகத்தன்மையை பெற முடியாமல் போனது. இதனால் வேறுவழியே இல்லாமல் தாமே பாஜக தலைமையிலான கூட்டணியில் இருப்பதாக தேமுதிக கூறி வந்தது.

அண்மையில் டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மொத்தம் 38 கட்சிகள் பங்கேற்றன. ஆனால் தேமுதிகவுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. தேமுதிகவைவிட சொற்பமான வாக்குகளை பெறக் கூடிய லெட்டர் பேடு கட்சிகளுக்கும் கூட பாஜக அழைப்பு விடுத்து தேமுதிகவை ஓரம்கட்டியதை அக்கட்சித் தலைவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. பாஜக அணியில் தேமுதிக இல்லாமல் போனதற்கு காரணமே அதிமுகவும் எடப்பாடி பழனிசாமியும்தான் காரணம் என குமுறுகின்றனர் தேமுதிக தலைவர்கள்.

இதனைத் தொடர்ந்து இனி திமுக தலைமையிலான கூட்டணியைத் தவிர வேறுவழியே இல்லை என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தேமுதிக. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளையும் கூட தேமுதிக மேலிடம் தொடங்கிவிட்டதாகவும் கூறப்பட்டது.
இப்பின்னணியில் சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது: பாஜக, அதிமுக உட்பட எந்த கட்சிகளுடனும் தேமுதிக கூட்டணி அமைக்கவில்லை என ஏற்கனவே கட்சி நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அறிவித்திருக்கிறார். பாஜக, அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கவே இல்லை. பாஜக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெறாத நிலையில்தான் தேமுதிகவை கூட்டணி கட்சிகள் கூட்டத்துக்கும் அழைக்கவில்லை. பாஜக கூட்டணியில் இடம்பெற்ற நிலையில் தேமுதிகவை அழைக்கவில்லை என்பது சரியானதும் அல்ல. நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார். இவ்வாறு பிரேமலதா கூறினார்.












Click it and Unblock the Notifications