ரசிகர்களுக்கு கடிதம் எழுதிய நடிகர் விஜய்.. 4 வரி லெட்டரில் இத்தனை எழுத்துப்பிழைகளா?
சென்னை: ரசிகர்களுக்கு நடிகர் விஜய் கைப்பட எழுதிய கடிதத்தில் 4 வரிகள்தான் இருந்தன. ஆனால் அதில் எத்தனை எழுத்துப்பிழைகள் இருந்தன தெரியுமா?
நடிகர் விஜய்.. தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் என பலர் கூறி வருகிறார்கள். இவர் சினிமாவில் ஆக்ஷன், காமெடி, நடனம், சென்டிமென்ட் காட்சிகளில் ரசிகர்களை சுண்டி இழுத்தார்.
இவருக்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ரசிகர்கள் உள்ளனர். இவர் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவருடைய ரசிகர்களின் ஆசை. அதற்கேற்ப தனது திரைப்படங்களில் அரசியல் வாடை இல்லாமல் இருக்காது.
மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி குறித்தும் இலவச மருத்துவம் குறித்தும் வசனம் மூலம் பேசியிருந்தார் விஜய். இவர் 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கே அரசியலுக்கு வருவார் என சொல்லப்பட்டது. ஆனால் அவர் தனக்கான ரயில் வரும் வரை காத்திருக்க வேண்டும் என சூசகமாக கூறியிருந்தார். இதையடுத்து விஜய் மக்கள் இயக்கத்தினர் உள்ளாட்சி தேர்தலில் தனது பெயரையும் இயக்கக் கொடியையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

இதன் மூலம் ரசிகர்கள் உள்ளாட்சிகளில் போட்டியிட்டு கணிசமான வெற்றியை பெற்றனர். இந்த தேர்தல் மூலம் விஜய் ஆழம் பார்த்தாரா என்றும் கேள்வி எழுந்தது. இவரது விஜய் மக்கள் இயக்கம் ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் விஜய்யின் பிறந்த நாளின் போது மக்கள் இயக்கத்தினர் ரத்த தானம் உள்ளிட்ட நலத்திட்டங்களை செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தனது பிறந்தநாளையொட்டி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தனது ரசிகர்களுக்கு விஜய் தனது கைப்பட கடிதம் எழுதியுள்ளார். தனது பிறந்தநாளில் 4 லட்ச ரூபாய் மதிப்பில் நலத்திட்டங்களை ரசிகர்கள் வழங்கியுள்ளனர். அவர்களை விஜய் பாராட்டியுள்ளார்.
அந்த கடிதத்தில், "கடந்த ஜூன் 22 அன்று எனது பிறந்தநாளில் நமது மக்கள் இயக்கம் வழியாக நீங்கள் செய்த பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் அறிந்தேன். உங்களது இந்த சிறப்பான செயல்பாடுகளை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன், நன்றி. - பிரியமுடன் விஜய்" என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
தனது பனையூர் அலுவலக லெட்டர் பேடில் விஜய் தனது கைப்பட நீல நிற மையில் எழுதியுள்ளார். இந்த கடிதம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதே வேளையில் அந்த கடிதத்தில் உள்ள பிழைகளையும் விஜய் ரசிகர்கள் அல்லாதவர்கள் சுட்டிக் காட்டி வருகிறார்கள்.
சுமார் 4 வரிகள் கொண்ட கடிதத்தில் எத்தனை பிழைகள் என விமர்சனம் செய்து வருகிறார்கள். ஜூன் என்பதற்கு பதிலாக ஜீன் என எழுதியிருந்தார். அது போல் சமூக என்பதற்கு பதிலாக சமுக என்றும் வலைதளங்களுக்கு பதில் வளைதளங்கள் என்றும் எழுதியுள்ளார். மேலும் நமது மக்கள் இயக்கம் வழியாக என போட்டுள்ளார். அதில் தவறு இல்லை என்றாலும் மக்கள் இயக்கம் மூலமாக என போட்டிருக்கலாம். அவர் 2026 இல் கோட்டையில் இருப்பார் என ரசிகர்கள் ஆரவாரம் செய்து வரும் நிலையில் அவர் எழுதிய கடிதத்தில் இத்தனை எழுத்துப்பிழைகள் உள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ரசிகர்கள் கூறுகையில் எழுத்துப்பிழையை ஏன் பார்க்கறீங்க. அவர் கைப்பட எழுதிய முன்னெடுப்பை பாருங்கள். தமிழ் நன்றாக எழுத படிக்கத் தெரிந்தவர்கள்தான் அரசியலுக்கு வர வேண்டுமா, இப்போது கையெழுத்து போடுவது மட்டும்தான் முதல்வரின் வேலை. மற்ற கடிதங்களை தயார் செய்வது ஐஏஎஸ் அதிகாரிகள்தான். அப்படியிருக்கும் போது தமிழில் தவறு வருவதை எல்லாம் பெரிதுப்படுத்துவதா. அவர் ஏற்கெனவே பல பேட்டிகளில் தான் ஒரு சராசரி மதிப்பெண் எடுக்கும் மாணவன் என குறிப்பிட்டுவிட்டார். ஒரு பெரிய நடிகர் எந்த பந்தாவும் இல்லாமல் கைப்பட கடிதம் எழுதியுள்ளார், இதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் பார்ப்பீர்களா என கேள்வி எழுப்பினர்.












Click it and Unblock the Notifications