"ஆக்ஷனில்" இறங்கும் ஸ்டாலின்.. ஆளுநர் ரவியின் செயல்பாடு தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் தனி தீர்மானம்
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் தொடர்பாக நாளை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வர உள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு, ஆன்லைன் சூதாட்ட தடை உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் இன்று தனி தீர்மானம் கொண்ட வர இருக்கிறார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி. நியமிக்கப்பட்டார். சில வாரங்களிலேயே ரவிக்குm தமிழ்நாடு அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் பல்வேறு வகைகளில் தொடர்ந்து வருகின்றன.
ஆளுநர் தமிழ்நாடு அரசு மோதல்: தமிழ்நாடு சட்டசபையில் அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதா, 7 தமிழர் விடுதலை மசோதா, ஆன்லைன் ரம்மி தடை மசோதா உள்ளிட்ட பல மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால் இந்த மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது அல்லாமல் பல்கலைக்கழக விவகாரங்களில் ஆளுநர் ரவி எடுக்கும் முடிவுகள், தமிழ்நாடு பெயர் சர்ச்சை தொடங்கி ஆளுநரின் சட்டப்பேரவை கூட்ட அறிமுக உரையில் அரசு எழுதிக்கொடுத்த குறிப்புகளை படிக்காதது வரை இந்த மோதல் வலுத்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய குடிமைப் பணி தேர்வுகளுக்காக தயாராகும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆளுநர் நிலுவையில் வைத்தால் அதற்கு நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்பதே பொருள். உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வே நிலுவையில் வைப்பது நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்பதே பொருள் என்று தெரிவிக்கிறது.
ஆளுநர் சர்ச்சை பேச்சு: நாட்டின் வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்க வெளிநாட்டு நிதி உதவிகள் பயன்படுத்தப்படுகின்றன. கூடங்குளத்தின் அணு உலை அமைக்கப்படும்போது போராட்டங்கள் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டன. கேரள மாநிலம் விளிஞ்சத்தில் அதானியின் துறைமுகம் அமைக்கப்படும்போதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதற்கெல்லாம் வெளிநாட்டு நிதிதான் பயன்படுத்தப்படுகிறது. தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பல கோடிக்கணக்கில் நிதி வருகிறது. அந்த நிதி தொண்டு செய்வதற்காக பயன்படுத்தப்படாமல் வேறு நோக்கங்களுக்காக பயன்படுப்படுகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இந்தியாவின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்து வந்தது. ஆனால், வெளிநாட்டு நிதி உதவி மூலமாக மக்களை தூண்டிவிட்டு அதை மூடிவிட்டார்கள். பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கும் வெளிநாடுகளில் இருந்தே நிதி கிடைத்து வந்தது. வெளிநாட்டு நிதி இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு பணம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு சென்ற 90 பேரை இந்த அமைப்பே அனுப்பி உள்ளது. வெளிநாட்டு நிதியை கட்டுப்படுத்துவதற்காகவே மத்திய அரசு எப்சிஐ நிதியை முறைப்படுத்தி உள்ளது." என்றார்.

முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்: இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "பொது மேடைகளில் சர்ச்சைக்குரிய அரசியல், சமூகக் கருத்துகளைப் பேசி மாநில மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்த ஆளுநர் ஆர்.என். ரவி, தற்போது சட்டமன்ற நடைமுறைகள் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தெரிவித்து நிர்வாக ஒழுங்கைக் கெடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தனது பதவிப் பிரமாணத்துக்கு முரணான வகையிலும், மாநில நலனுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநருக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் சிந்தனையில் உருவான சட்டங்கள், அவசரச் சட்டங்கள் சட்டத்திருத்தங்கள் ஆகியவற்றுக்கு உடனடி ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி, தனது நிர்வாகவியல் கடமைகளில் இருந்து தவறியும், தனது கடமைகளில் இருந்து தப்பித்தும், நழுவியும் வருவதை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வழக்கமாக வைத்துள்ளார்கள். அதற்கு முறையான காரணத்தையும் அரசுக்குத் தெரிவிப்பதும் இல்லை. இப்படி 14 கோப்புகள் அவரால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
முடக்குவாத செயல்: இவை ஆளுநரின் கடமை தவறுதல் மட்டுமல்ல, செயல்படாத முடக்குவாதச் செயலாகவே அமைந்துள்ளது. தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால், ஏதாவது ஒப்புக்கு ஒரு கேள்வியைக் கேட்டு அரசுக்கு அனுப்பி வைத்துவிட்டு தனது கடமை முடிந்ததாக இருக்கிறார் ஆளுநர். உதாரணமாக எளிய மனிதர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் வகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் என்பது மிகமிக அவசர, அவசிய நோக்கத்தோடு இயற்றப்பட்டது ஆகும்.
முதலில் ஏதோ உப்புச்சப்பற்ற கேள்வியைக் கேட்டார். பின்னர். இந்த சட்டம் இயற்றும் உரிமையே மாநில அரசுக்கு இல்லை என்றார். 'மாநில அரசுக்கே உரிமை உண்டு' என்று ஒன்றிய அமைச்சர்களே சொன்னபிறகும் இங்கிருக்கும் ஆளுநர் அதனை ஏற்கவில்லை. ஏனெனில் ஏற்க மனமில்லை. இத்தனை உயிர்கள் பலியான பிறகும் கரையாததாக ஆளுநரின் மனம் இருப்பது அதிர்ச்சியையே தருகிறது.
சட்டம் அறிந்தவர் போல் கருத்துக்களைத் தெரிவித்து வரும் ஆளுநருக்கு, அரசியலமைப்புச் சட்டத்தின்படி பண மசோதாவைத் திரும்ப அனுப்பிட அதிகாரம் கிடையாது. ஆனால், கடந்தாண்டு அக்.17ஆம் தேதி அன்று ஆளுநராலேயே பரிந்துரைக்கப்பட்டு, சட்டமன்றத்தால் ஏற்பளிக்கப்பட்டு சட்டப்பேரவைத் தலைவரால் பண மசோதா என்று கடந்தாண்டு அக். 10 அன்று சான்றளிக்கப்பட்ட ஆன்லைன் ரம்மி மசோதாவை அவர் கடந்த மார்ச் 6ஆம் தேதி அன்று திரும்ப அனுப்பியது அரசியலமைப்புச் சட்டத்தை மீறியது என்பதை அவர் தெரிந்தும் செய்துள்ளாரா என்பதை பொது மக்களின் கருத்துக்கே விட்டு விடுகிறேன்.
பதவிக்கு அழகல்ல: இந்த நிலையில் இன்றைய தினம் ஆளுநர் அவர்கள் தெரிவித்துள்ள கருத்து, அவர் வகிக்கும் பதவிக்கு அழகும் அல்ல. அவர் அப்படிப் பேசிய இடம் முறையான இடமும் அல்ல. 'கிடப்பில் இருந்தாலே நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். நீண்ட நாட்களாக கிடப்பில் வைக்கப்பட்டுள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். வார்த்தை அலங்காரத்துக்காக அதனை நிறுத்தி வைப்பு என்கிறோம்' என்று பேசி இருக்கிறார் ஆளுநர். மாணவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு அவர்கள் மத்தியில் இப்படி பேசி இருக்கிறார். ரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்துள்ள ஒருவர், நிர்வாக ரீதியாக தான் எடுக்கும் நிலைப்பாடு குறித்து பொதுவெளியில் இப்படி அலட்சியமாகக் கருத்துகளை வெளிப்படுத்துவது அரசியல் சட்ட வரையறைகளை மீறிய செயல் ஆகும்.
"Shamsher Singh v. State of Punjab" (1975) என்ற வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மாநில அரசின் சுருக்கெழுத்து தான் ஆளுநர் என்று சுருக்கமாகச் சொன்னார்கள். அதனை மறந்துவிட்டு, 'தி கிரேட் டிக்டேட்டராக' தன்னை ஆளுநர் நினைத்துக் கொள்ள வேண்டாம். அரசியலமைப்புச் சட்டத்தின்படி பண மசோதா தவிர பிற வகை மசோதாக்களை ஆளுநர், அரசுக்குத் திருப்பி அனுப்பலாம். சட்டமன்றம், மீண்டும் அந்த மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால், அதனை ஆளுநரால் நிராகரிக்க முடியாது.

கருத்தை திரும்பப்பெற வேண்டும்: எனவே ஆளுநர் அவர்கள் கேட்ட விளக்கங்களைக் கொடுத்து மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த பிறகும் ஒப்புதல்கள் வழங்காமல் இருப்பது சட்டமுறையும் ஆகாது. சட்டம் அறிந்தவர் முறையும் ஆகாது. இதனை நமது மாநிலத்தின் நிர்வாகத்தினை முடக்கும் செயலாகவே எண்ண வேண்டியுள்ளது. எதையும் துணிச்சலாக ஏற்கவோ, எதிர்க்கவோ செய்யாமல் கிடப்பில் போடுவது என்பது அரசியல் சட்டம் அங்கீகரித்த பதவியில் இருப்பவருக்கு அழகல்ல. அதையும் தாண்டி., அதனை சட்டபூர்வமற்ற பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதோடு நியாயப்படுத்திட முயல்வது என்பது மிகமிக மோசமான முன்னுதாரணம் ஆகும்.
தான் சொன்ன கருத்தைத் திரும்பப் பெறுவதே ஆளுநர் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்துக்கு உண்மையாக நடந்து கொள்வது ஆகும். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் குரலைப் பிரதிபலிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பினைக் குறைக்கும் வகையில் ஆளுநர் பேசி வருவது அவருக்கும் அழகல்ல, அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல. இதனை உணர்ந்து அவர் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும் அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநர் பதவிக்கு அளிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாக நிறைவேற்றிடும் வகையில் அவர் செயல்படுவார் என நான் நம்புகிறேன்." என தெரிவித்து உள்ளார்.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்!












Click it and Unblock the Notifications