ரயில்வேயில் வடஇந்தியர்களுக்கு போஸ்டிங்.. தமிழர்கள் புறக்கணிப்பு.. தனி நபராக முறியடித்த சு.வெங்கடேசன்
சென்னை: தென்னக ரயில்வேயில் தென்னிந்தியர்களுக்கு இடம் கொடுக்காமல் வடஇந்தியர்கள் பலர் நியமனம் செய்யப்பட்டதை தமிழ்நாடு சிபிஎம் எம்பி சு. வெங்கடேசன் எதிர்த்து இருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
தென்னக ரயில்வேயில் வடஇந்தியர்கள் அதிகம் நியமிக்கப்படுவதாக பல வருடமாக புகார் வைக்கப்பட்டு வருகிறது. சென்னையில் தேர்வு எழுதிய பலருக்கு போஸ்டிங் போடாமல், தென்னக ரயில்வேயில் வடஇந்தியர்களுக்கு போஸ்டிங் போடப்படும் சம்பவங்கள் நடக்கின்றன.
அதாவது தென்னிந்தியாவில் பலர் தேர்வில் வென்றும் போஸ்டிங் கிடைக்காமல் இருக்கும்போது, வடஇந்தியாவில் உள்ளவர்களுக்கு தென்னிந்தியாவில் போஸ்டிங் போடப்படுகிறது. இதை சிபிஎம் எம்பி சு. வெங்கடேசன் எதிர்த்து இருந்தார். இது தொடர்பாக மத்திய ரயில்வே துறைக்கு அவர் கடிதமும் எழுதி இருந்தார்.

கோரிக்கை
சிபிஎம் எம்பி சு. வெங்கடேசன் தனது அறிக்கையில் , உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட ஐம்பத்தி நான்கு விண்ணப்பதாரர்களை தெற்கு ரயில்வே பணிகளுக்கு நியமித்து, தெற்கு ரயில்வேயின் சென்னை தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை புறக்கணித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டனத்துக்குரியது.

கடிதம்
உடனடியாக இந்த உத்தரவை திரும்பப் பெறவேண்டும். சென்னை தேர்வு வாரியத்தின் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களை அந்த காலி இடங்களுக்கு நியமிக்க வேண்டும் சு வெங்கடேசன் எம் பி ரயில்வே அமைச்சருக்கும் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கும் கடிதம் எழுதி உள்ளார். 2018 ல் ரயில்வே வாரியம் உதவி ரயில் ஓட்டுனர் காலியிடங்களுக்கும் டெக்னீசியன் காலியிடங்களுக்கும் விண்ணப்பங்கள் கோரியிருந்தது. தெற்கு ரயில்வேயில் 761 உதவி ரயில் ஓட்டுநர் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரி இருந்தது. விண்ணப்பதாரர்கள் ஒரு ரயில்வேக்கு தான் விண்ணப்பிக்க முடியும். எந்த மொழியில் வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம்.

ரயில்வே
எந்த ரயில்வேக்கு தேர்வு எழுதுகிறார்களோ அந்த ரயில்வேக்கு தான் அவர்கள் நியமிக்கப்பட வேண்டும். வேறு ரயில்வேக்கு அவர்கள் நியமிக்கப்பட கூடாது. ஆனால் உத்தரப் பிரதேசத்திலுள்ள கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 பேரை தெற்கு ரயில்வேயில் உள்ள 51 இடங்களில் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் மதிப்பெண்கள் தெற்கு ரயில்வேயில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களை விட குறைவானதாகும்.

கோரிக்கை
அதுமட்டுமல்ல இதர ரயில்வேயில் தேர்வு செய்யப்பட்டவர்களை தெற்கு ரயில்வேயில் நியமிப்பது சட்ட விரோதமாகும். ஏற்கனவே டெக்னீசியன் கேட்டகரியில் தெற்கு ரயில்வேக்கு விண்ணப்பித்தவர்களில் 60 சதம் பேர் இந்தியில் தேர்வு எழுதியவர்கள் வந்துள்ளார்கள். இந்த உதவி ஓட்டுநர் பதவிக்கு 13 சதம் பேர் இந்தியில் தேர்வு எழுதியவர்கள் வந்துள்ளார்கள். இது ரயில்வே அமைச்சர் எனக்கு கொடுத்த அதில் கூறப்பட்டுள்ளது.

தனியாக எதிர்த்தார்
இந்த நிலையில் தெற்கு ரயில்வேயில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை புறக்கணித்து கோரக்பூர் ரயில்வேயில் தேர்வு செய்யப்பட்டவர்களை செய்யப்பட்டவர்களை நியமிப்பது தெற்கு ரயில்வே விண்ணப்பதாரர்களின் வேலைவாய்ப்பை பாதிப்பதோடு ஜனநாயக அமைப்பை சீர்குலைப்பதாகவும் உதவும் இருக்கிறது. ரயில்வே அமைச்சர் உடனே தலையிட்டு கோரக்பூர் விண்ணப்பதாரர்களை கோரக்பூர் திருப்பி அனுப்பவும் தெற்கு ரயில்வேயின் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை அந்த உதவி ஓட்டுனர் காலியிடங்களில் நிரப்பவும் கோருகிறேன், என்று எம்பி சு வெங்கடேசன் குறிப்பிட்டு இருந்தார்.

ஒரே குரல்
தென்னிந்தியாவில் வேறு யாரும் இந்த நியமனம் குறித்து பேசாத நிலையில் எம்பி சு வெங்கடேசன் மற்றும் இதை பற்றி தனியாக பேசி இருந்தார். இந்த நிலையில்தான் இவரின் எதிர்ப்பை தொடர்ந்து தற்போது இந்த பணி நியமனம் நிறுத்தப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் தேர்வு செய்யப்பட்டவர்களை தெற்கு ரயில்வேக்கு பணியமர்த்தும் நடவடிக்கை நிறுத்தப்பட்டு உள்ளது. இதற்கான பட்டியல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.இனி புதிய பெயர்கள் கொண்ட பட்டியல் அனுப்பப்படும். அதில் தென்னிந்தியர்களுக்கு வாய்ப்பு தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியமனம் நிறுத்தம்
இது தொடர்பாக தற்போது ட்வீட் செய்துள்ள எம்பி சு. வெங்கடேசன், உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் தேர்வு செய்யப்பட்டவர்களை தெற்கு ரயில்வேக்கு பணியமர்த்தும் நடவடிக்கை முறியடிப்பு. பட்டியலை திருப்பி அனுப்பியது தெற்கு ரயில்வே. விரைந்து நடவடிக்கைக்கு எடுத்தமைக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தெற்கு ரயில்வேயில் ஐம்பத்தி ஒரு ரயில் ஓட்டுநர் காலியிடங்களுக்கு வடகிழக்கு ரயில்வேயின் கோரக்பூர் தேர்வாணையத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 பேர் பட்டியலை தெற்கு ரயில்வே கேட்டு வாங்கியது. அந்த பட்டியல் 24 .9. 2021 அன்று தெற்கு ரயில்வேக்கு அனுப்பப்பட்டது.

பட்டியல் மாற்றம்
இந்த செயல் எந்த வகையிலும் நியாயமானதல்ல, இது நிறுத்தப்பட வேண்டும் என்று 25 .9. 2021 அன்று ரயில்வே அமைச்சருக்கும் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும் நான் கடிதம் எழுதினேன். தெற்கு ரயில்வே எனது கோரிக்கையை ஏற்று அந்த கோரக்பூர் தேர்வாளர் பட்டியலை28-9-2021 அன்று திருப்பி அனுப்பியுள்ளது. தெற்கு ரயில்வேயின் பொது மேலாளருக்கும் எனது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்த தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய கோரிக்கை
அதே நேரத்தில் 51 காலியிடங்களக்கு காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஆர்ஆர்பி சென்னை தேர்வானவர்களைத் தேர்வு செய்திட தெற்கு ரயில்வே பொது மேலாளரை கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே ஆர்ஆர்பி சென்னை இணையதளத்தில், அறிவிக்கப்பட்ட காலியிடங்கள் அதிகரிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வு செய்யப்பட்ட அவர்களின் பட்டியல் 2022 வரை பணியமர்த்தலாம் என்றும் இணையதளத்தில் உள்ளது .எனவே தெற்கு ரயில்வே பொது மேலாளரை சென்னையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களையும் அந்த ஐம்பத்தொரு காலியிடங்களில் நிரப்பிட கோருகிறேன், தேவைப்பட்டால் ரயில்வே அமைச்சரை இதில் தலையிடவும் அதற்கு அனுமதி வழங்கவும் கோருகிறேன், என்று எம்பி சு வெங்கடேசன் குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications