மேற்கு தொடர்ச்சி மலைகளின் பாதுகாவலர்.. நீலகிரி பூங்காவின் வடிவமைப்பாளர்.. மாதவ் காட்கில் காலமானார்!
சென்னை: இந்தியாவின் இயற்கை அடையாளங்களில் மிகவும் முக்கியமானதுதான் இந்த மேற்கு தொடர்ச்சி மலை. இந்த மலையில் பாதுகாவலராகவும், நீலகிரி உயிரியல் பூங்காவின் வடிவமைப்பாளராகவும், சமூக அடிப்படையிலான பாதுகாப்பு முறைக்கு குரல் கொடுத்தவருமான, மாதவ் காட்கில் உயிரிழந்திருக்கிறார்.
இவர் முதுபெரும் சூழலியல் வல்லுநராகவும் அறியப்பட்டார். மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழுவின் தலைவரான காட்கில், இந்தியாவின் முதன்மைச் சூழல் சிந்தனையாளராகப் போற்றப்பட்டார். உள்ளூர் சமூகங்களை மையமிட்ட சூழல் பாதுகாப்பு அணுகுமுறையை அவர் முன்மொழிந்தார். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 83.

கடந்த 2010ம் ஆண்டு, மத்திய அரசு, இவரை மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழு (காட்கில் ஆணையம்) தலைவராக்கியது. அதன் அறிக்கை இப்பகுதிகளுக்கு கடுமையான பாதுகாப்பு விதிகளைப் பரிந்துரைத்தது. இது 6 மாநிலங்களில் அரசியல் விவாதங்களை உண்டாக்கியது.
சூழலியல், சமூகம் சார்ந்த பாதுகாப்பிற்கு ஆற்றிய வாழ்நாள் பங்களிப்பிற்காக, 2024இல் ஐ.நா.வின் 'சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்' விருது அவருக்கு வழங்கப்பட்டது. இது ஐ.நா.வின் உயரிய சுற்றுச்சூழல் கவுரவமாகும். 2024இல் சர்வதேச அளவில் இந்த விருது பெற்ற 6 பேரில் இவரும் ஒருவர்.
1986இல் இந்தியாவின் முதல் உயிர்க்கோளக் காப்பகமான நீலகிரி உருவாவதற்கு காட்கில் முக்கியக் காரணமாக இருந்தார். மேற்குத் தொடர்ச்சி மலையின் மூன்று மாநிலங்களில் சூழலியல் ஆய்வு மேற்கொண்ட அவர், வனச் சமூகங்களுடன் வாழ்ந்து, வனப் பகுதிகளை ஆராய்ந்தார்.
பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழு உறுப்பினரான காட்கில், இந்திய உயிரியல் பன்மைச் சட்டம் மற்றும் வன உரிமைச் சட்டத்தின் முக்கிய சிற்பியாக செயல்பட்டார்.
2024இல் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஊடகத்திற்கு காட்கில் அளித்த பேட்டியில், "பருவநிலை மாற்றம் மற்றும் அதன் தாக்கத்தைச் சமாளிக்க, கல் குவாரிகள், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும். இதைச் செய்வது எளிதல்ல, ஏனெனில் குவாரிகளும் வாகன விற்பனையும் பெரும் பணம் கொட்டும் தொழில்கள். எதிர்காலத்தில், அடித்தட்டு மக்களும், விளிம்புநிலை சமூகங்களும் ஒன்றிணைந்து இந்தச் சூழ்நிலையை மாற்றத் தங்கள் குரல்களை உயர்த்துவார்கள் என்று நம்புகிறேன்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications