சட்டக் கல்லூரிகளில் உதவி பேராசரியர் பணியிடம்.. முக்கிய உத்தரவு பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: ஓராண்டு முதுகலை சட்டப் படிப்பு படித்தவர்களை, சட்டக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு சட்டக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக பெறப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜனவரி 24 ம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் உதவி பேராசியர் பணிக்கு விண்ணப்பிக்க, ஓராண்டு முதுகலை சட்டப் படிப்பை தகுதியாக கருதி முடியாது என குறிப்பிடப்பட்டிருந்தது. முதுகலை சட்டப்படிப்பில் இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து ஆண்டாள், பிளிசன், செய்யது அன்சாரி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்கள்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் வி.ஜெய்பரத் மற்றும் ஒய்.கவிதா ஆஜராகி, அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஓராண்டு சட்ட முதுகலை படிப்பை முடித்தவர்களையும் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, மனுதாரர்களிடம் ஆன்லைன் மூலம் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்களை பெற வேண்டும் என்றும் விண்ணப்பங்களை நிராகரிக்க கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழக அரசின் உயர் கல்வி துறை, சட்டத்துறைக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கவும், சம்பந்தப்பட்ட துறைகள் இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் 13 ம் தேதி தள்ளி வைத்தார்.
முன்னதாக அரசு சட்டக் கல்லுரிகளில் இணை உதவி பேராசிரியர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் 3 வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இது மார்ச் 18 வரை நீடிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது, "ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு சட்டக் கல்லூரி இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண். 01 / 2025. நாள். 24.012025 வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 03.03.2025 லிருந்து 18.03.2025 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது" என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.












Click it and Unblock the Notifications