உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகளை.. டிஎன்பிஎஸ்சி மூலம் நியமிக்க இடைக்கால தடை! சென்னை ஐகோர்ட் அதிரடி
சென்னை: உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நியமனம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு கடந்த மாதம் வெளியிட்ட அரசாணைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
தமிழ்நாட்டில் செய்தி, மக்கள் தொடர்பு துறையில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள். அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வது தான் இவர்களின் நோக்கம்.
இவர்கள் பெரும்பாலும் தற்காலிகமாகவே பணி அமர்த்தப்படுவார்கள். இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டு இருந்தது.

உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நேரடியாக துறை ரீதியில் பணியமர்த்தப்பட்டு வந்த நிலையில், அவர்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்வார்கள் என ஆகஸ்ட் 1ஆம் தேதி வந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதன் மூலம் பணி நியமனங்களில் வெளிப்படைத்தன்மை இருக்கும் எனப் பலரும் இதைப் பாராட்டினர். இந்தச் சூழலில் இதற்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மயிலாடுதுறையைச் சேர்ந்த ஸ்ரீநிவாச மாசிலாமணி என்பவர் தாக்கல் செய்த அந்த மனுவில் தற்காலிக அடிப்படையிலான உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நியமிக்க முடியாது எனக் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நியமனம் தொடர்பான அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications