டாஸ்மாக் விவகாரம்.. ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் சோதனை நடத்த அதிகாரமில்லை.. EDக்கு தடை விதித்த ஐகோர்ட்!
சென்னை: டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறையின் மேல் நடவடிக்கைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் நடந்த சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களில் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறிய நீதிபதிகள், ஆகாஸ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்தனர்.
மார்ச் மாதம் டாஸ்மாக் நிறுவனத்தில் ரெய்டு நடத்திய அமலாக்கத்துறை ரூ.1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டியது. இதன்பின் தொடர்ந்து ஆவணங்களை கைப்பற்றுவதற்காக சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இதன்பின் இருவரின் வீடுகளுக்கும் சீல் வைத்து சென்றனர்.

நீதிமன்றம் சென்ற ஆகாஷ் பாஸ்கரன்
அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் இருவரும் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் ரமேஷ் மற்றும் லக்ஷ்மி நாராயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது எதனடிப்படையில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோரிடம் விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
சீல் வைக்க அதிகாரம் உள்ளதா?
இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் பதில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதனை பார்த்த நீதிபதிகள், இது வெறும் தகவல்களாக உள்ளது. ஆவணங்கள் எங்கே? வீட்டில் சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்கள். இதன்பின் கூடுதல் ஆவணங்கள் அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
பள்ளிக்கு சென்ற ஆகாஷ் பாஸ்கரன்
அந்த ஆவணங்களையும் பார்த்த நீதிபதிகள், அமலாக்கத்துறை சமர்ப்பித்த ஆவணங்களுக்கும், வாதங்களுக்கும் பொருந்தவில்லை என்றனர். அதேபோல் ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2014 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் ஆகாஷ் பாஸ்கரன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்ததாக வாதிட்டனர்.
ஒப்புக் கொண்ட அமலாக்கத்துறை
இதன்பின் சீல் வைக்க என்ன அதிகாரம் இருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், சீலை அகற்றி, நோட்டீஸை எடுத்துவிடுகிறோம் என்று பதில் அளித்தனர். ஆனாலும் சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்வி எழுப்ப, இறுதியாக அமலாக்கத்துறைக்கு சீல் வைக்கும் அதிகாரம் கிடையாது என்று ஒப்புக் கொண்டது.
ரெய்டுக்கு அதிகாரமில்லை
இதனைத் தொடர்ந்து இன்று சென்னை உயர்நீதிமன்றம், டாஸ்மாக் வழக்கு தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இல்லை. நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களில் எந்த ஆதாரமும் இல்லை.
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
இதனால் டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறையின் மேல் நடவடிக்கைக்கு தடை விதிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது. அதுமட்டுமல்லாமல், கைப்பற்றிய பொருட்கள் மற்றும் ஆவணங்களை திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications