அதிமுக வழக்கு.. தேர்தல் ஆணையம் முடிவெடுக்க தயக்கம் காட்டுவதைப் போல தெரிகிறதே.. ஐகோர்ட் காட்டம்!
சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. "அதிமுக உட்கட்சி விவகாரத்தில் முடிவெடுக்க தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுவதைப் போலத் தெரிகிறது" என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும்? என்ற காலவரம்பு விவரங்களைக் குறிப்பிட்டு ஜூலை 21 ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக வழக்கு
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது உள்ளிட்ட பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்கக்கூடாது என்றும், அதிமுக உள்கட்சி விவகாரம் முடிவுக்கு வரும்வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்றும் கோரி, தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சூரியமூர்த்தி, பெங்களூர் புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், ராமச்சந்திரன், சுரேன் பழனிச்சாமி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்து வருகிறது.
எடப்பாடி பழனிசாமி மனு
இந்நிலையில், அதிமுகவுக்கு எதிரான இந்த மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு விதிகளின்படி, அதிமுகவின் உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகார வரம்பு உள்ளதா என்பதை ஆரம்பகட்ட விசாரணை நடத்தி முடிவுக்கு வரவேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
உயர் நீதிமன்றம் இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்து 7 வாரங்கள் கடந்த நிலையில், தேர்தல் ஆணையம் தனக்குரிய அதிகார வரம்பு குறித்து இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை என்றும், தேர்தல் ஆணையத்தின் ஆரம்பக்கட்ட விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கோரியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
இழுத்தடிக்கிறது - எடப்பாடி புதிய மனு
அந்த மனுவில் , "2026-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அதிமுக தயாராக வேண்டிய சூழலில், அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் தொடர்பாக விசாரிக்கும் அதிகார வரம்பு குறித்து தேர்தல் ஆணையம் ஆரம்பக்கட்ட விசாரணையை முடிவுக்கு கொண்டு வராமல் இழுத்தடிப்பது சட்டவிரோதமானது. தேர்தல் ஆணையத்தின் இந்தப் போக்கு அதிமுக குறி்த்த தேவையற்ற தகவல்களைப் பரப்ப வழிவகுத்துவிடும்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் தேர்தல் ஆணையத்தின் இத்தகையப் போக்கை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. எனவே அதிகார வரம்பு தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணையை தேர்தல் ஆணையம் இனியும் தாமதிக்காமல், துரிதமாக நடத்தி முடிக்கும் வகையில் காலவரம்பை உயர் நீதிமன்றம் நிர்ணயம் செய்ய வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இன்று விசாரணை
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், கே.சுரேந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில், "சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி இரண்டு மாதங்கள் நிறைவடைந்த பின்னரும் அது தொடர்பாக எந்த உத்தரவும் தற்போது வரை பிறப்பிக்கவில்லை.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் விரைவாக உத்தரவு பிறப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இதுபோன்ற வழக்குகளில் மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது" என வாதிடப்பட்டது.
விரைவில் முடிவு - தேர்தல் ஆணையம்
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், "இந்த விவகாரம் தொடர்பாக 6 புகார்கள் வந்துள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக பரிசீலித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். இந்த விவகாரத்தில் விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள் கேள்வி
அப்போது நீதிபதிகள், அரசியல் சாசன அமைப்பான தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் உத்தரவு பிறப்பிக்காவிட்டால் தங்கள் அரசியல் சாசன கடமையைச் செய்யத் தவறுகிறார்கள் என்பது போன்றது அல்லவா? என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுவதைப்போல தெரிகிறது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், "ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் குடியரசுத் தலைவருக்கே காலவரம்பு நிர்ணயித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவரை விட உயர்ந்ததா?" என கேள்வி எழுப்பினர்.
தேர்தல் ஆணையம் பதில்
இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையத் தரப்பு வழக்கறிஞர், அரசியல் சாசனத்தில் உயர்ந்த அதிகாரி, தாழ்ந்த அதிகாரி என்று எதுவும் இல்லை. அரசியல் சாசனத்தில் அனைத்து அதிகாரிகளும் சமமானவர்கள். மேலும் இந்த விவகாரத்தில் எப்போது முடிவெடுக்கப்படும்? என அதிகாரிகளைக் கேட்டுத் தெரிவிப்பதாகக் கூறினார்.
தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பான புகார்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் என காலவரம்பை குறிப்பிட்டு எழுத்துப்பூர்வமான விளக்கத்தை தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications