என்கவுண்டர்களுக்கு எதிராக ஹைகோர்ட் சரமாரி கேள்வி.. வெள்ளத்துரை மீது வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவு
சென்னை: போலீசிடமிருந்து தப்ப முயற்சிப்பவர்கள் கீழே விழுந்து காயம் அடைவது விசித்திரமான முறையில் அதிகரித்து வருகிறது என உயர் நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது. மேலும் மதுரையில் கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற என்கவுண்ட்டர் தொடர்பாக கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரை மற்றும் போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த குருவம்மாள். இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2010 ஆம் ஆண்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், கூறியிருந்தாவது:- எனது மகன் முருகனை கடந்த 2010 ஆம் ஆண்டு, மதுரை மாநகர காவல் உதவி ஆணையராக இருந்த வெள்ளத்துரை மற்றும் உதவி ஆய்வாளர் தென்னவன், ஏட்டு கணேசன் ஆகியோர் சேர்ந்து சுட்டுக்கொலை செய்தனர்.

இது தொடர்பாக நான் அளித்த புகாரின் பேரில் வெள்ளைத்துரை (கூடுதல் டிஎஸ்பியாக இருந்து தற்போது ஓய்வு பெற்று விட்டார்) மற்றும் சம்பந்தட்ட போலீசார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் விசாரணையை சிபிசிஐடியிலிருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குருவம்மாள் கூறியிருந்தார். இந்த வழக்கு முன்பு விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில் சில வாதங்கள் வைக்கப்பட்டிருந்தது. அந்த வாதத்தில் கூறப்பட்டு இருந்ததாவது:-
மனுதாரர் மகன் உள்பட தேடப்பட்டு வந்த 2 பேர் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அவர்களை பிடிக்க முயன்றபோது, போலீசாரை அரிவாளால் தாக்கினர். இதனால் அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மனுதாரர் மகன் முருகன் மீது 25 வழக்குகளும், அவரது கூட்டாளி கவியரசன் மீது 75 வழக்குகளும் நிலுவையில் இருந்தன" என்று கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி பிறப்பித்த உத்தவரவில் கூறியிருப்பதாவது:-
மனுதாரர் மகன் இறந்த சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைய குழு விசாரணையில், உதவி கமிஷனர் வெள்ளத்துரை மட்டும் 10 என்கவுண்ட்டர்களில் ஈடுபட்டுள்ளார் என்று இந்த நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்த அதிகாரி, தற்காப்புக்காக மீண்டும், மீண்டும் என்கவுன்ட்டர்களில் ஈடுபட்டாரா அல்லது யாரோடு தூண்டுதலின்பேரில் இதுபோல நடந்து கொண்டாரா? என்பதை விசாரணை செய்ய வேண்டும்.
இத்தகைய விவகாரங்களில் முழுமையான விசாரணை நடத்துவது அவசியம். தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கை சிறப்பாக பாதுகாக்கும் ஒரு அமைப்பாக உள்ளது. இருந்த போதிலும், போலீசாரை தாக்க முயலும் ஆபத்தான குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது, பின்னர் அவர்கள் சுட்டுக்கொல்லப்படுவது அல்லது காயம் அடைவது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலீசிடம் தப்பிக்க முயற்சிப்பதும், பிறகு கீழே விழுந்து கை, கால்களை உடைத்துக்கொள்வதும் விசித்திரமான முறையில் அதிகரித்து வருகிறது.
இதுபோன்ற நடவடிக்கைகள் பிற்போக்கான சிந்தனை ஆகும். ஆனால், இதனை உணராமல் பாராட்டுகிறார்கள். உடனடி மரணம் சரியான தண்டனை என்ற நம்பிக்கை ஒரு மாயை.. அது உண்மையானது இல்லை. என்கவுன்டர் வழக்குகளில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு இருக்கிறது.
இந்த வழக்கில் மனுதாரர் மகன் இறந்த வழக்கில் காவல்துறை தாக்கல் செய்த இறுதி அறிக்கை ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும். உயர் அதிகாரி ஒருவரை தமிழக காவல் டிஜிபியாக நியமித்து, மனுதாரர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். 6 மாதத்தில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications