சூலூர் ரோட்டுல களேபரம்.. போலீஸ் கன்னத்திலேயே "அறைந்த" மதுரை நந்தினி.. திமிறிய நிரஞ்சனா.. கவனித்த பாஜக
சென்னை: கோயம்புத்தூர் சாலையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. மதுரை நந்தினியை வழிமறித்து, போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.. என்ன காரணம்?
மதுரை நந்தினி யார்? இப்போது இவருக்கு 30 வயதாகிறது.. சட்டக்கல்லூரி மாணவியாக இருந்த காலத்திலிருந்தே மதுபானத்துக்கு எதிராக போராட ஆரம்பித்தவர்...

தொடர்ந்து சமூக, அரசியல் பிரச்னைகளுக்கு எதிராகவும் போராடி வருபவர்.. இதன் காரணமாகவே, கடந்த கால ஆட்சியில் பல வழக்குகள் நந்தினி மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆட்சி மாறியுள்ள நிலையிலும், மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நந்தினி போராட்டங்களை நடத்தி வருகிறார்.. இதனால் அடிக்கடி கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டும் வருகிறார். பொள்ளாச்சி பாலியல் வழக்கு சம்பந்தமாக மனு அளிக்க சென்னை கிளம்பியபோதும்கூட இவர் கைது செய்யப்பட்டார்.
தந்தையுடன் கைது: அதுமட்டுமல்ல, கொரோனாவினால் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று கூறி, பிரதமர் மோடி மீது பகிரங்கமாக புகார் சொன்னவர் நந்தினி.. அத்துடன் பிரதமர் மீது வழக்கு தொடருவதற்காக, குடியரசு தலைவரின் அனுமதி கோரி சென்னை ஆளுநர் இல்லம் முன்பு போராட்டம் நடத்த சென்றபோதும்கூட, தன்னுடைய தந்தையுடன் சேர்ந்தே கைதாகி ஜெயிலுக்கு போனார். இதோ இன்றும் ஜெயிலுக்குதான் போயிருக்கிறார். இதற்கு காரணம், ஊட்டியில் நடந்து வரும் ஆர்எஸ்எஸ் பேரணி.
ஊட்டியில் ஆர்எஸ்எஸ் கூட்டம் நடந்து வருகிறது... இந்த கூட்டம் நடப்பதற்கு நந்தினியும், அவரது 25 வயது சகோதரியான நிரஞ்சனாவும் எதிர்ப்பு தெரிவித்தனர்.. இதனால், ஊட்டிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்தனர்.. இதற்காகவே, 2 பேரும் மதுரையில் இருந்து கோவைக்கு பஸ் ஏறினார்கள்.. இவர்கள் கோவைக்கு பஸ்சில் வந்து கொண்டிருப்பதாக கோவை மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

திடீர் சோதனை: இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது.. எனவே, 2 சகோதரிகளையும் வழியிலேயே மடக்கி பிடிக்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, சூலூர் போலீசார் போலீஸ் நிலையம் முன்பு தடுப்புகளை அமைத்துவிட்டார்கள்.. அந்த வழியாக வந்த எல்லா பஸ்களையும் தீவிர சோதனைக்கு உள்ளாக்கி, அதற்கு பிறகே அனுமதித்தனர்.
அப்போதுதான், கோவையில் இருந்து மதுரைக்கு அந்த பஸ் வந்தது.. அந்த பஸ்சிலும் ஏறி போலீசார் சோதனை நடத்தியபோது, நந்தினி, நிரஞ்சனாவும் உட்கார்ந்திருந்தனர்..
அவர்கள் 2 பேரையும் பஸ்சை விட்டு பெண் போலீசார் உதவியுடன் போலீசார் கீழே இறக்கினார்கள்.. 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்குள் அழைத்து செல்லவும் முயன்றனர். அப்போது 2 பெண்கள், அங்கு பணியில் இருந்த பெண் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
பரபரப்பு: இதில் ஒரு பெண் போலீஸை, 2 பேரும் கன்னத்தில் மாறி மாறி அறைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மேலும் சில பெண் போலீசாரை வரவழைத்து, சகோதரிகள் 2 பேரையும் சூலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றுள்ளனர்.. இந்த சம்பவத்தினால் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனந்தி போலீஸ்: சகோதரிகள் இருவரும், ஆனந்தி என்ற பெண் போலீஸை கன்னத்தில் அறைந்ததுடன், தகாத வார்த்தைகளால் பேசியதாக புகார் எழுந்துள்ளது.. அதற்கு பிறகுதான், கூடுதல் போலீஸ் வரவழைக்கப்பட்டு 2 பேரையும் சூலூர் மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.. சம்பந்தப்பட்ட பெண் போலீஸ் அளித்த புகாரின் பேரில், இருவரையும் கைதுசெய்த போலீஸ், சூலூர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளன்ர.
இந்த கைது நடவடிக்கைக்கு, நந்தினியின் தந்தையும், அவரது கணவர் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "ஆர்எஸ்எஸ் கூட்டம் நடத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுமதி - அதை தட்டிக் கேட்ட நந்தினி - நிரஞ்சனா கோவை மத்திய சிறையில் அடைப்பு. இதுதான் திராவிட மாடலா?" என்று சோஷியல் மீடியாவில் கண்டனங்கள் பதிவாக துவங்கி உள்ளன.












Click it and Unblock the Notifications