காலில் விழுந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு மாஃபா பாண்டியராஜன் ஆதரவு.. ஓபிஎஸ்ஸுக்கு அதிர்ச்சி வைத்தியம்
சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் காலில் விழுந்து ஆசி பெற்று தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தொழிலதிபரான மாஃபா பாண்டியராஜன், விஜயகாந்த் தொடங்கிய தேமுதிகவில் இணைந்து கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
இதையடுத்து 2013 ஆம் ஆண்டு தேமுதிகவை சேர்ந்த அருண்பாண்டியன், ஆர் சாந்தி, தமிழழகன், மைக்கேல் ராயப்பன், மாஃபா பாண்டியராஜன், ஆர் சுந்தரராஜ், டி சுரேஷ்குமார் ஆகிய 7 பேரும் மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக அறிவித்த வேட்பாளருக்கு பதிலாக அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்தனர்.

அதிமுகவில் இணைந்த மாஃபா
இந்த நிலையில் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட சிலர் அதிமுகவில் இணைந்தனர். இதன் பலனாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு மாஃபா பாண்டியராஜன் ஆவடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார். அவரும் அந்த தொகுதியில் வென்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பதவியேற்றார்.

ஜெயலலிதா மறைவு
இதையடுத்து ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்த போது ஓபிஎஸ்ஸுக்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தார். இதனால் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பதவியை இழந்தார். மாஃபா பாண்டியராஜனுக்கு பெரும்பாலான மக்கள் போன் போட்டு நல்ல முடிவை எடுத்ததாக பாராட்டியிருந்தனர்.

மீண்டும் அமைச்சரானார் மாஃபா
பின்னர் ஓபிஎஸ்ஸுடனேயே பயணித்த நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த போது ஓபிஎஸ்ஸுக்கு துணை முதல்வர் பதவியும் மாஃபா பாண்டியனுக்கு தமிழ் மொழி கலாச்சாரம், தொல்லியல் துறை அமைச்சர் பதவியும் கிடைத்தது.

தோல்வி
இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆவடி தொகுதியில் நாசரை எதிர்த்து போட்டியிட்ட மாஃபா பாண்டியராஜன் தோல்வியுற்றார். இந்த நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்தார். அப்போது அவருக்கு பூங்கொத்து கொடுத்து காலில் விழுந்து வணங்கி தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மாஃபா பாண்டியராஜன் பாஜகவுக்கு நெருக்கமானவர். அவரே தற்போது எடப்பாடி பக்கம் வந்துவிட்டார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் மாஃபா பாண்டியராஜன் ஜெயலலிதாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட மாஃபா, தான் எப்போதும் ஜெயலலிதாவின் பக்கம்தான் என மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். முதலில் விஜயகாந்தை விட்டு வெளியேறிய மாஃபா தற்போது ஓபிஎஸ்ஸை விட்டும் வெளியேறியதால் பரபரப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications