மகளிர் உரிமைத் தொகை ஓகே.. தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் வருதாமே? கேட்டதுமே பெண்களுக்கு மகிழ்ச்சி
சென்னை: திமுகவை பொறுத்தவரை பெண்களின் வாக்குகளே பெருத்த பலமாக திகழ்ந்து வருகிறது. அதனால்தான், மகளிருக்கும், பெண் பிள்ளைகளுக்கும், பல்வேறு திட்டங்கள் என பெண்களை மையப்படுத்தியே வெளியிட்டு வருகிறது.. விரைவில் சட்டசபை தேர்தல் வரஉள்ளநிலையில், பெண்களின் ஓட்டுகளை பெற அரசு திட்டமிட்டும் வருகிறது. அது என்ன?
ஏழை பெண்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு, மூவலுார் ராமாமிர்தம் நினைவு திட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மணமகளுக்கு, 25,000 ரூபாய் நிதியுதவியும், எட்டு கிராம் தங்க நாணயமும் வழங்கியது. பட்டம் பெற்ற மணமகளுக்கு, 50,000 ரூபாயும், எட்டு கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டது.
ஆனால், இது கடந்த 2022ம் ஆண்டு பட்ஜெட்டில் மாற்றி அமைக்கப்பட்டது.. "தமிழகத்தில் அரசு பள்ளி மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

புதிய முன்முயற்சி
இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் 6 - 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு/பட்டயப்படிப்பு/தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்குக்கு நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இந்த திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்.
இந்த திட்டத்தின் மூலம், சுமார் 6 லட்சம் மாணவிகள் ஒவ்வொரு வருடமும் பயன்பெற வாய்ப்புள்ளது. இந்தப் புதிய முன்முயற்சிக்காக பட்ஜெட்டில் 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' என்று தமிழக பட்ஜெட் 2022 குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது..
இப்படியொரு அறிவிப்பு வெளியானதுமே, தாலிக்கு தங்கம் என்ற திட்டம் மாற்றப்பட்டு புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு ஆதரவு ஒரு பக்கமும், எதிர்ப்பு மறுபக்கமும் கிளம்பின. காரணம், பட்டப்படிப்பு படித்த ஏழைப் பெண்ணின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கமும், ரூ. 50,000-ம், பள்ளிப்படிப்பு முடித்த பெண்களின் திருமணத்துக்கான நிதி உதவியாக ஒரு பவுன் தங்கத்துடன் ரூ. 25,000-ம் வழங்கும் திட்டம் தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வந்தது.
ஆனால், பட்ஜெட்டில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டு அதற்கு மாற்றாக 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரியில் சேருகின்ற பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டமாக மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
மீண்டும் தாலிக்கு தாலி
இதனால், பயன்பெறத் தகுதியுள்ள உண்மையான ஏழைப்பெண்களுக்கு அரசின் நிதி இனி சரியாகப் போய் சேரும் என்பதுடன் புரோக்கர்களுக்கு இதில் இடமிருக்காது. எனினும், மீண்டும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை தொடங்க வேண்டும் என்று கோரிக்கைகள் பல்வேறு தரப்பிலிருந்து எழுந்தன. மற்றொருபுறம், இந்து திருமண முறையைத் தடுக்கும் வகையில் திமுக அரசு, தாலிக்கு தங்கம் வழங்குவதை நிறுத்தியுள்ளது என்று பாஜகவும் குற்றஞ்சாட்டியது.
இப்படிப்பட்ட சூழலில், மீண்டும் தங்கத்துக்கு தாலி திட்டம் குறித்த பேச்சு அடிபட்டு வருகிறது.. தங்கத்தின் தற்போது விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
மீண்டும் அமலுக்கு வரும் திட்டம்
சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் சவரன் விலை, 72,000 ரூபாயை எட்டியுள்ளது. இதனால், திருமணம் நடத்தும் வயதில் பெண்களை வைத்திருக்கும் ஏழை மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்... இந்த தகவலை உளவு துறை வாயிலாக பெற்றுள்ள தமிழக அரசு, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை, மீண்டும் செயல்படுத்த பரிசீலித்து வருகிறதாம்.
திமுகவை பொறுத்தவரை பெண்களின் வாக்குகளே பெருத்த பலமாக திகழ்ந்து வருகிறது. அதனால்தான், பல்வேறு திட்டங்களை பெண்களை மையப்படுத்தியே வெளியிட்டு வருகிறது.. விரைவில் சட்டசபை தேர்தல் வரஉள்ளநிலையில், பெண்களின் ஓட்டுகளை பெற அரசு திட்டமிட்டும் வருகிறது.. எனவே, மாதம், 1,000 ரூபாய் பெறாத கல்லூரி மாணவியரை உள்ளடக்கிய, அனைத்து ஏழை பெண்களும் பயன்பெறும் வகையில், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை, மீண்டும் செயல்படுத்த, அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.
வாக்கு வங்கி உயருமா
ரூ.1000 மகளிர் உரிமைத்திட்டமானது, பெண்களிடம் ஏற்கனவே மகத்தான வரவேற்பை பெற்று வருகிறது.. கடந்த 4 வருடங்களில் நடந்த இடைத்தேர்தல்களில், திமுக அரசின் வெற்றிக்கு பெண்களின் ஓட்டுகளே பிரதான காரணமாக அமைந்திருந்ததை மறுக்க முடியாது.. அதுபோல, தாலிக்கு தங்கம் அமல்படுத்தப்பட்டால், அது ஏழை பெண்களுக்கு பெருத்த உதவியாக இருக்கும் என்பதுடன், வரப்போகும் தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கியை மேலும் உயர்த்தும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications