“ட்ரிபிள் ஜம்ப்”..அதிக பல்டி! மைத்ரேயனின் அரசியல் “சடுகுடு”.. எடப்பாடி டென்சன் - நீக்கத்தின் பின்னணி
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவிய அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயனை கட்சியிலிருந்தே நீக்குவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக விவாதிக்க கடந்த ஜூன் மாவட்டச் செயலாளார்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் கூட்டப்பட்டது. அப்போது ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் இடையே வெடித்த மோதல் இன்று வரை தொடர்ந்து வருகிறது.
அதன் விளைவாகவே முதல் பொதுக்குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டு ஜூலை 11ம் தேதி இரண்டாவது பொதுக்குழு கூட்டத்தை கூட்டி தன்னை பொதுச்செயலாளராக மகுடம் சூட்டிக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி.

பறிபோன பதவி
ஜூன் 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது என உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவால் எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி பறிபோனது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

மீண்டும் பதவி
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இருவர் அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இதனால் மீண்டும் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார். இதனை தொடர்ந்து அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முழுமையாக மகுடம் சூட்டிக்கொள்ளலாம் என்ற திட்டத்தில் வேகமாக காய்களை நகர்த்தினார் எடப்பாடி பழனிசாமி.

ஓபிஎஸ் வைத்த செக்
ஆனால், பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான உச்சநீதிமன்ற படியேறினார் ஓ.பன்னீர்செல்வம். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பல கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.

அணி தாவும் படலம்
இது ஒருபக்கம் இருக்க சூழலுக்கு ஏற்ப அதிமுக நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகளுக்கு தாவும் படலம் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் நேற்றுவரை எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவாக இருந்த அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவி இருக்கிறார்.

ட்ரிபிள் ஜம்ப்
இதனை தொடர்ந்து அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். ஓ.பன்னீர்செல்வம் 2017 ஆம் ஆண்டு தர்மயுத்தத்தை தொடங்கியபோது அவரோடு இருந்தவர் மைத்ரேயன். கடந்த ஜூன் மாதம் மீண்டும் மோதல் ஏற்பட்டபோதும் ஓபிஎஸ் அணியிலேயே இருந்தார் மைத்ரேயன்.

தேனியில் தஞ்சம்
ஆனால், அப்போது எடப்பாடிக்கு சாதகமாக காற்று வீசியதை உணர்ந்து அணி தாவினார். இந்த நிலையில் மீண்டும் ஓபிஎஸ் அணிக்கு சாதகமான சூழல் உருவாகி இருப்பதை உணர்ந்து தேனி அணியில் தஞ்சம் அடைந்து இருக்கிறார் மைத்ரேயன். இதனால் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைக்கும் ஆளாகி உள்ளார்.

விளக்கம்
இதுகுறித்து மைத்ரேயன் பேசுகையில், "யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல எனக்கு புத்தி பேதலித்தால் வேலியைத் தாண்டிய வெள்ளாடாக மாறினேன். எடப்பாடி அணியில் இணைந்து 108 நாட்களில் இப்போது மீண்டும் ஓபிஎஸ் அணிக்குத் திரும்பி உள்ளேன். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது எதிரணி என்று கூட பார்க்காமல் நலம் விசாரித்தார் ஓபிஎஸ். அனைவரையும் ஒருங்கிணைத்து அதிமுக இயக்கத்தை வழிநடத்தும் திறன் ஓபிஎஸுக்கே உள்ளது." என்றார்.












Click it and Unblock the Notifications