விஜயகாந்துக்கு மதுரையில் முழு உருவச்சிலை நிறுவ வேண்டும்! மேயர் இந்திராணிக்கு காங்கிரஸ் எம்.பி கடிதம்
சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மதுரையில் முழு உருவச் சிலை நிறுவ வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணிக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. எழுதியுள்ள கடிதத்தில், மதுரையில் பிறந்து வளர்ந்து, வாழ்ந்து, அரசியலிலும், சினிமாவிலும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த கேப்டன் விஜயகாந்துக்கு மாமதுரையில் முழு உருவச் சிலை அமைத்து நிறுவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

விஜயகாந்தின் உடலே இன்னும் நல்லடக்கம் செய்யப்படாத நிலையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் இத்தகைய கோரிக்கையை விடுத்து கவனம் ஈர்த்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனக்கு எழுதியுள்ள கடிதத்தின் மீது மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் மேயர் மட்டும் தனிப்பட்ட முறையில் எந்த முடிவும் எடுக்கமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த தலைவர்களுக்கு சிலை நிறுவ வேண்டும் என்றால் அது எளிதில் முடியக்கூடிய காரியமல்ல. எண்ணற்ற சிக்கல்களும், பிரச்சனைகளும் உள்ளன. விஜயகாந்தின் மீதான அன்பால் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் இத்தகைய கோரிக்கையை வைத்துள்ளார். விஜயகாந்தின் உடலை வைக்க ராஜாஜி ஹாலை வழங்கி பொது இடத்தில் அடக்கம் செய்ய அனுமதி கொடுக்க வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை விடுத்திருந்த நிலையில் சிலை நிறுவ வேண்டும் என மாணிக்கம் தாகூர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே விஜயகாந்த் குடும்பத்தினர் கேட்காமலேயே அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
