செல்வப்பெருந்தகையுடன் எந்த பிரச்சனையும் இல்லையே.. மாணிக்கம் தாகூர் சொன்ன வார்த்தை! என்ன நடந்தது?
சென்னை: என்னைப் பற்றி செல்வப்பெருந்தகை கருத்தை பெரிதுபடுத்த தேவையில்லை என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் பெரிய பிரச்சனை எதுவும் இல்லை என்று கூறிய அவர், நாங்கள் சகோதரர்களாக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்து வருவதாக கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் திமுகவை சீண்டி வருகிறார். ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக திமுக தலைமைக்கு மாணிக்கம் தாகூர் அழுத்தம் கொடுத்து வந்தார். முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது என்று தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்த போது, மாணிக்கம் தாகூர் தொடர்ந்து பேசி வருகிறார்.

ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் அமைதி காத்து வரும் சூழலில், மாணிக்கம் தாகூரின் பேச்சு திமுகவினரை கொந்தளிக்க வைத்தது. இதனால் செல்வப்பெருந்தகை நேரடியாக மாணிக்கம் தாகூர் தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கேவிடம் புகார் அளித்திருக்கிறார். ஆனால் இன்று காலை மாணிக்கம் தாகூர், பாரதியாரின் அச்சமில்லை அச்சமில்லை என்று வரிகளை பதிவிட்டார்.
இந்த நிலையில் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஆட்சியில் பங்கு என்பது தொடர்பாக தொடர்ந்து பேசி வருகிறேன். அதனை திருப்பி திருப்பி பேச வேண்டிய தேவையில்லை. ஜனவரி 17ஆம் தேதி ராகுல் காந்தியிடமும் இதனை கூறியுள்ளேன். அதேபோல் அண்ணன் செல்வப்பெருந்தகையின் கருத்தை பொருட்படுத்த தேவையில்லை. அண்ணன் தம்பிக்கு இடையில் பெரிய பிரச்சனை இல்லை.
நாங்கள் அனைவரும் சகோதரர்கள்.. ராகுல் காந்தி, கார்கே தலைமையில் காங்கிரஸ் கட்சியை பலமாக உருவாக்க உழைத்து வருகிறோம். எங்களுக்கு இடையில் யாரும் சிண்டு மூட்டிவிட வேண்டாம்.. காலையில் குட் மார்னிங் மெசேஜ் போடுவதை போல், சோசியல் மீடியாவில் ஏதாவது எழுதுவேன்.. அதனை கண்டுகொள்ள தேவையில்லை.
கரூர் எம்பி ஜோதிமணி குறித்து பாஜகவின் கேவலமான பார்வை தொடர்ந்து வருகிறது. நயினார் நாகேந்திரன் நடிகை த்ரிஷா குறித்து பேசினார். தற்போது பாஜக மாவட்டத் தலைவர்களுக்கு இந்த நோய் வந்துள்ளதாக நினைக்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜோதிமணி குறித்து தவறான பேச்சுகளை பேசும் பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஜக நிர்வாகிகளுக்கு பெண்களை கேவலமாக பேசுவது கைவந்த கலையாகிவிட்டது. இது பாஜக, ஆர்எஸ்எஸ்-ன் கலாச்சாரமாக இது மாறிவிட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மணிசங்கர் ஐயருக்கு வயதாகிவிட்டது. வயது மூப்பு காரணமாக அதிருப்தியில் இருக்கிறார். காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டின் நன்மைக்காக முடிவுகளை எடுக்கப் போகிறது. நாங்கள் தமிழ்நாட்டின் நன்மைகளுக்கான போராடுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications