என்ன செய்வீர்களோ தெரியாது.. பூட்டிய மளிகை கடையை உடைத்தாவது.. பதைபதைத்துப் போன துரை வைகோ!
சென்னை: எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, பூட்டிய மளிகை கடையை உடைத்தாவது உணவு தயாரிக்க தேவையான பொருட்களை தயார் செய்யச் சொல்லி 1500 பேருக்கு மதிய உணவு வழங்கியுள்ளார் துரை வைகோ.
சென்னையை புயல் தாக்கும் போது தாம் எங்கிருந்தேன் என்பது குறித்தும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் காரிலேயே தாம் சென்னை வந்து சேர்ந்தது குறித்தும் சுவாரஸ்யமாக விவரித்துள்ளார் துரை வைகோ. அதன் விவரம் வருமாறு;

''கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் தென் மாவட்டக் கழக சுற்றுப்பயணத்திலும், கழகத் தோழர்களின் இல்ல திருமண நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருந்தேன். அந்த நேரத்தில் தான் மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் பெருமழை பெய்ய தொடங்கியிருந்தது.
நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு விமானம் மூலம் சென்னை கிளம்பலாம் என திட்டமிட்டு இருந்த நிலையில், மழையின் காரணமாக அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டிருந்தது. அதன்பிறகு, காரிலேயே கிளம்ப முடிவெடுத்த போது, மதுரையிலும், திருச்சியிலும், பெரம்பலூரிலும் உள்ள கழக நிர்வாகிகள் மழை காரணமாக சென்னை முழுவதும் போக்குவரத்து முடங்கிவிட்டது. சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல ஓடிக்கொண்டு இருக்கிறது. அசாதாரண சூழல் இருப்பதால் நீங்கள் சென்னைக்கு செல்ல வேண்டாம். இங்கேயே தங்கிவிடுங்கள் என அக்கறையுடன் வலியுறுத்தினார்கள்.
ஆனால், ஆபத்து என்றால் நாம் மக்களோடு இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என அவர்களிடம் தெரிவித்து விட்டு காரிலேயே சென்னைக்கு கிளம்பினேன்.
கடந்த 2015 ஆம் ஆண்டு பெருமழையின் போது தலைவர் வைகோ அவர்களின் மூலமாக பல உதவிகளை மக்களுக்கு செய்தோம்.
அதைப்போல, கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அரசி மூட்டைகள் மற்றும் உணவு பொருட்களை பல்லாயிரம் மக்களுக்கு வழங்கினேன். அந்த நேரத்தில் நாம் தான் இதுபோன்ற உதவிகளை முதலில் செய்ய தொடங்கினோம். சென்னை மாநகராட்சி நிர்வாகம் இயன்ற உதவிகளை செய்யுங்கள் என அப்போது ஒரு அறிவிப்பு வெளியிட்டது. சென்னை மாநகாரட்சிக்கு நாம் தான் முதன்முதலில் நம்முடைய பங்களிப்பை வழங்கியிருந்தோம்.
சென்னை அண்ணா நகர் அருகில் உள்ள பகுதி மக்களுக்கு இதுபோன்ற ஆபத்து காலங்களில் உதவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளேன். இந்த சூழலில், உணவின்றி தவிக்கும் அந்த மக்கள் தலைவர் வைகோ அவர்களின் வீட்டிலிருந்து ஏதாவது உதவி கிடைக்கும் என நம்பி இருப்பார்கள். அவர்களுக்கு உதவிட வேண்டும் என்று தான் சென்னைக்கு கடந்த டிசம்பர் 4 இரவோடு இரவாக விரைந்து வந்தேன்.
இதுபோன்ற சூழல்களில் எப்போதும் உதவியாக இருக்கும் கழகத்தின் மூத்த முன்னோடி கொடையுள்ளம் கொண்ட நல்லையா அண்ணாச்சி அவர்களை தொடர்பு கொண்டு மழை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உணவு தயாரித்து வழங்க வேண்டும் என தெரிவித்தேன். வழக்கமாக உணவு தயாரிக்கும் அவருடைய நிறுவனம் அமைந்துள்ள இடத்தில் மழை நீர் புகுந்து விட்டதாகவும், உணவு தயாரித்து கொடுப்பது கடினம் எனவும், வாகன வசதிகள் இல்லை எனவும் தெரிவித்தார்.
அவருடைய சூழலை புரிந்து கொண்டு, தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சகோதரர் வழக்கறிஞர் சைதை ப.சுப்பிரமணி அவர்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவித்தேன்.
மளிகை கடைகள் பூட்டி இருப்பதாகவும், சமையல்காரர்கள் இந்த நேரத்தில் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார். 'நீங்கள் என்ன செய்வீர்கள் என தெரியாது. பசியால் வாடும் மக்களுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்ய வேண்டும். பூட்டிய மளிகை கடையை உடைத்தாவது உணவு தயாரிக்க தேவையான பொருட்களை தயார் செய்யுங்கள். அதற்கு உண்டான முழு பொருட்செலவையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்' என, சொன்னேன்.
மின்னல் வேகத்தில் செயல்பட்டு இரவோடு இரவாக உணவு தயாரிக்கும் பணியினை செய்து முடித்தார் சகோதரர் ப.சுப்பிரமணி அவர்கள்.
டிசம்பர் 5 ஆம் தேதி காலை, அண்ணாநகர் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் காலனி, அண்ணா ஆதர்ஷ் கல்லூரி, டி.என்.எஸ்.சி.பி பிரிவரி சாலை ஆகிய இடங்களில் உணவின்றி தவித்த 1500 பேருக்கு காலை சிற்றுண்டி வழங்கினோம். இதை பெரிய உதவி என்று சொல்ல மாட்டேன். ஒரு மன திருப்திக்காக செய்த சிறிய உதவி. அவ்வளவு தான்.
நாம் உணவு வழங்கிய இடத்தில் உணவை பெற்றுக் கொண்டவர்களில் பலர் அதற்கு முதல் நாள் காலையிலிருந்தும், மதியத்தில் இருந்தும் கூட உணவின்றி இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவியதில் தான் மன திருப்தி. நம்மை பார்த்து மற்றவர்களும் உதவி செய்ய முன் வருவார்கள் என்ற எண்ணத்தில் தான் இப்பணியை செய்தேன்.''












Click it and Unblock the Notifications