தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டிற்கு VBG RAMG எனப்படும் 100 நாள் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான மத்திய அரசு நிதி ஒதுக்கீடு மிகப் பெரியளவில் குறையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள வரைவு முன்மொழிவில் தமிழகத்திற்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடு 60% வரை குறைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுக்க கிராமங்களின் பொருளாதாரத்தில் மிக முக்கியமானதாக இருப்பது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம். இந்தத் திட்டத்தை மத்திய அரசு இப்போது வரும் ஜூலை 1 முதல் 'VB-G RAM G' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.

rural employment

60% குறைப்பு

இந்த ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்காக மத்திய அரசு ஒதுக்கும் மொத்த நிதியில், சுமார் 10% பங்கைத் தமிழ்நாடு பெற்று வந்தது. ஆனால், 16வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய பார்முலா, இனி தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வு வெறும் 4.1 சதவீதமாகக் குறையும் எனத் தமிழக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். அதாவது வழக்கமாகக் கிடைக்கும் நிதியில் இருந்து சுமார் 60% நிதி குறைக்கப்படுகிறது. இது குறித்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது.

இந்த அதிரடி மாற்றத்தால், மக்கள் தொகை அதிகமாக உள்ள வட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப் போகிறது. அதே நேரத்தில், இந்தத் திட்டத்தை ஆரம்பத்திலிருந்தே மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி, அதிகப் பலன்களைப் பெற்று வந்த தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்குப் பெரும் இழப்பு ஏற்படப் போகிறது.

நிதி ஒதுக்கீடு சரிவு

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்த ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு இதுவரை மொத்தம் ₹87,639 கோடி நிதியைப் பெற்றுள்ளது. ஆனால், புதிய ஒதுக்கீட்டு முறையின்படி, 2026-27 நிதியாண்டிற்கான மொத்த மத்திய ஒதுக்கீடான ₹95,692 கோடியில், தமிழ்நாட்டிற்கு வெறும் ₹3,923 கோடி மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பும் கூட தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுக்காண்டு சரிந்து வருவதையே டேட்டா காட்டுகிறது. 2023-24 நிதியாண்டில் தமிழக அரசின் நிதி ஒதுக்கீடு ₹12,698 கோடியாக இருந்தது. 2024-25 நிதியாண்டில் அது ₹10,156 கோடியாகக் குறைந்த நிலையில், 2025-26 நிதியாண்டில் அது மேலும் ₹5,878 கோடியாகக் குறைந்தது. இந்தச் சூழலில் தான் 2026-27 நிதியாண்டில் அது மேலும் குறைந்து, ₹3,923 கோடி மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் மாநிலங்கள்

தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களும் இந்த வரைவு விதிகளால் கடுமையாகப் பாதிக்கப்படும். தென் மாநிலங்களுக்கு ஒட்டுமொத்தமாக 30% முதல் 40% வரை நிதி குறையலாம் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

இதுவரை கிராமப்புற மக்கள் கேட்கும் வேலைக்கு ஏற்ப மத்திய அரசு நிதி ஒதுக்கி வந்தது. ஆனால், இனிமேல் Normative Allocation Model என்ற புதிய மாடல் மூலமாக முன்கூட்டியே மாநிலங்களுக்கான நிதி தீர்மானிக்கப்படும். இதை கணக்கிட 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு, மாநிலத்தின் தனிநபர் வருமானம் மற்றும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு செயல்பாடு ஆகியவை பயன்படுத்தப்பட உள்ளன.

தமிழக அரசு எதிர்ப்பு

மத்திய அரசின் இந்த அதிரடி மாற்றத்திற்குத் தமிழக அரசு அதிகாரிகள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "தேவையின் அடிப்படையில் மக்களுக்கு வேலை தருவதுதான் இந்தத் திட்டத்தின் அடிப்படை அஸ்திவாரம். அதை மாற்றிவிட்டு, முன்கூட்டியே இவ்வளவுதான் நிதி என்று மாநிலங்களுக்குப் பிரித்துத் தருவது இதன் நோக்கத்தையே சிதைத்துவிடும். இது வரும் ஆண்டுகளில் கிராமப்புறத் தமிழ்நாட்டைக் கடுமையாகப் பாதிக்கும்" என்றார்.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, சிறந்த பொருளாதார வளர்ச்சியை எட்டிய தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களுக்கு, இந்த புதிய மக்கள் தொகை அடிப்படையிலான நிதிப் பகிர்வு முறை மிகப்பெரிய அநீதியையும், பின்னடைவையும் ஏற்படுத்துகிறது என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு. கடந்த மே 22 அன்று வெளியிடப்பட்ட இந்த வரைவு விதிமுறைகளுக்கு எதிராக, ஆலோசனைகளையும் எதிர்ப்புகளையும் தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+