ரூ.100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி தோனி வழக்கு.. விசாரணையை தள்ளி வைத்த சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
இந்த வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் மற்றும் தனியார் தொலைக்காட்சி மீதான குற்றச்சாட்டுகளை வரையறை செய்வதற்காக வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி ஐபிஎல் சூதாட்டம் குறித்து ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் விசாரணை நடத்தி வந்தார். இவர் வெளியிட்ட விசாரணை அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிக்கை பெரிய அளவில் சர்ச்சயை ஏற்படுத்தியது. இந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு தனியார் தொலைக்காட்சி நிறுவனமான ஜீ தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இந்த நிலையில் ஜீ தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டதாக தோனி வழக்கு தொடுத்தார்.
100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி கிரிக்கெட் வீரர் தோனி 2014ஆம் அண்டு இந்த வழக்கை தொடர்ந்திருந்தார். ஜீ தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார் மற்றும் தனியார் தொலைதொலைக்காட்சி ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கில் ஜீ தொலைக்காட்சி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தோனி தரப்பு இந்த மனுவில் பல தகவல்களை மறைந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மேட்ச் பிக்ஸிங் செய்தது, சூதாட்டத்தில் தோனிக்கு தொடர்பிருப்பதாக இடைத்தரகர் கிட்டி சாட்சியம் அளித்தது, தோனியை காப்பாற்றும் நோக்கில் கிட்டியின் வாக்குமூலத்தை சிபிசிஐடி மறைத்தற்கு முத்கல் கமிட்டி கண்டனம் தெரிவித்தது உள்ளிட்ட பல விஷயங்களை மறைத்து தோனி இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தோனி மீது தங்களுக்கு தனிப்பட்ட வெறுப்பு இல்லை என்றும், கிரிக்கெட்டின் நடைபெறும் சூதாட்டத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவரவே விவாத நிகழ்ச்சியை நடத்தியதாகவும், தோனி என்பவர் கிரிக்கெட்டை விட உயர்ந்தவர் இல்லை என்றும், அது சூதாட்டத்தின் அடித்தளமாக மாறிவருவதாகவும், அதுபோலதான் சமீபத்தில் உச்ச நீதிமன்றமும் கருத்து தெரிவித்துள்ளதாகவும், ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கவே தோனி வழக்கு தொடர்ந்துள்ளாதால் அபராதத்துடன் அவரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பதில் மனுவில் ஜீ தொலைக்காட்சிதெரிவித்திருந்தது.
இந்த வழக்கை இன்று நீதிபதி என்.சேஷசாயி விசாரணை செய்தார். அதில் கருத்து சுதந்திரம் என்பது அடுத்தவர்களின் தனிமனித உரிமையை பாதிக்க கூடாது என்று குறிப்பிட்டார். இதையடுத்து இந்த வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் மற்றும் தனியார் தொலைக்காட்சி மீதான குற்றச்சாட்டுகளை வரையறை செய்வதற்காக வழக்கை தள்ளிவைப்பதாக நீதிபதி என்.சேஷசாயி தெரிவித்தார் .












Click it and Unblock the Notifications