எடப்பாடிக்கு குட் நியூஸ்.. சிறப்பு புலனாய்வு தேவையில்லை! ஆர்.எஸ் பாரதி போட்ட டெண்டர் வழக்கு தள்ளுபடி
சென்னை: நெடுஞ்சாலை துறையில் ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு நடந்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
2018 ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் குறை காண முடியாது, ஆட்சி மாற்றம் காரணமாக புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை என்று உயர் நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் கூறியுள்ளது.

கடந்த 2016-2021 ஆண்டில் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்து அதிமுக பல்வேறு டெண்டர் முறைகளை செய்து உள்ளதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்ததாக தற்போதைய ஆட்சியில் வழக்கு பதியப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
முக்கியமாக பல்வேறு டெண்டர் தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன. முக்கியமாக அதிமுக ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி அதில் பல டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக 2018லேயே ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
பல்வேறு நெடுஞ்சாலை துறை டெண்டர்களை தனது உறவினர்களுக்கு கொடுத்து ஊழல் செய்தார் என்று புகார் வைக்கப்பட்டது. மொத்தம் 4800 கோடி ரூபாய் அளவிற்கு இதில் முறைகேடு நடந்ததாக புகார் வைக்கப்பட்டது. அதன்படி வண்டலூர் - வாலாஜா சாலை 4 வழிச் சாலையை 6 வழிச் சாலையாக மாற்றுவதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் வைக்கப்பட்டது. இதில் 200 கோடி ஒப்பந்தம் எஸ்பிகே அண்ட் கோ செய்யப்பட்டதில் முறைகேடு செய்யப்பட்டதாக புகாரில் கூறப்பட்டது.
வழக்கு விவரம்: முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அளித்த புகார் மீது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படி, 2018ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.
அதன்படி அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, எட்பபாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் C. ஆரியமா சுந்தரம் ஆஜராகி, ஏற்கனவே தாக்கல் செய்யபட்ட ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வாதிட்டார். ஊழல் கண்காணிப்பு ஆணையர் என்பவர் விசாரணை அதிகாரி இல்லை என்றும், லஞ்ச ஒழிப்பு துறை அளிக்கும் அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும் நடைமுறை மட்டுமே அவருக்கு உள்ளது என விளக்கம் அளித்தார். லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி, புகாருக்கு எதிர்மறையான அறிக்கையை அளித்த பிறகு, அதை ஆராய தேவையில்லை எனவும் வாதிட்டார்.
லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, பொது ஊழியருக்கு எதிரான குற்றச்சாட்டுடன் புகார் வந்தால் அதை விசாரிக்க ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அதிகாரம் உள்ளதாக விளக்கம் அளித்தார். லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையின் அறிக்கையை ஏற்கவும், நிராகரிக்கவும் ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அதிகாரம் உள்ளதாகவும் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை என கடந்த 2018ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை விஜிலென்ஸ் ஆணையர் ஏற்கவில்லை என்றும், மீண்டும் புதிதாக விசாரணை நடத்த அனுமதித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆர்.எஸ்.பாரதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, விசாரணையில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக வழக்கை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்துவதாக தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி தரப்பில் 2018ல் செய்த ஆரம்பகட்ட விசாரணையின் முடிவில், மூடிமுத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாக கூறி வழக்கை தள்ளிவைத்தார். இந்த வழக்கில்தான் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நெடுஞ்சாலை துறையில் ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு நடந்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
2018 ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் குறை காண முடியாது, ஆட்சி மாற்றம் காரணமாக புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை என்று உயர் நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications