"மெத்தப் படித்தவர்களும், மெத்தை வீடுகளில் இருப்பவர்களும்.. வாக்களிக்க வர வேண்டும்.." அமைச்சர் மாசு
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்துள்ள நிலையில், இதற்கான காரணத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் நேற்றைய தினம் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு நேற்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வெறும் 60.70 % வாக்குகள் மட்டுமே பதிவானது.
குறிப்பாகச் சென்னை மாநகராட்சியில் 43.59% வாக்குகள் மட்டுமே பதிவானது. இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன் என்பது குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

குடியரசு தின விழா ஊர்திகள்
டெல்லி குடியரசு தின விழாவில் மறுக்கப்பட்ட ஊர்திகள் சென்னை குடியரசு தின விழாவில் பங்கேற்ற பின்னர் மதுரை, கோவை, திருச்சி என மாநிலம் முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டன. தற்போது மீண்டும் சென்னைக்கு வந்துள்ள இந்த ஊர்திகள் வரும் வரும் ஜன. 23 வரை மெரினாவில் பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்தப்படும் எனச் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி அறிவித்துள்ளார். பொதுமக்கள் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஊர்திகளைப் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மா.சு
இதனிடையே தற்போது மெரினாவில் உள்ள இந்த அலங்கார ஊர்திகளை அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "குடியரசு தின விழாவில் பங்கேற்ற இந்த ஊர்திகள், அதன் பின்னர் மாநிலம் முழுவதும் சென்று வந்தது. மொத்தம் 2100 கிமீ இந்த ஊர்திகள் பயணித்து, இப்போது மீண்டும் சென்னை வந்துள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு இது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்" என்றார்.

நாடகம் நடத்திய ஜெயக்குமார்
தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்துப் பேசிய அவர், "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திமுக வட்ட செயலாளர் மீது கூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கள்ள ஓட்டுப் போட வந்ததாகக் கூறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நாடகம் நடத்தினார். ஆனால், பாவம் அது எல்லாம் வீணாகிவிட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட தேர்தல்களில் அசம்பாவித சம்பவங்கள் நடந்தன.

வாக்குப்பதிவு குறைந்தது ஏன்
ஆனால், நேற்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. மெத்தப்படித்தவர்கள், மெத்தை வீட்டில் இருப்பவர்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார்கள். அதை நிவர்த்தி செய்வது நமது கடமை. ஆனால் வாக்களிப்பது அவர்களுடைய கடமை. வரும் காலங்களில் வாக்களிப்பார்கள் என எண்ணுகிறேன்.

சொந்த ஊர்
கடந்த 2 ஆண்டுகளாக வாட்டும் கொரோனா பாதிப்பால் சிறு தொழில் செய்தவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டார்கள். 15 முதல் 20 சதவீதம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டதாலேயே வாக்குப்பதிவு குறைந்துள்ளது" என்று அவர் தெரிவித்தார். மொத்தம் 12,000க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க நேற்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications