குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் பலியாகி இருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது.. அமைச்சர் மஸ்தான் பரபர!
சென்னை: குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்து உள்ளதாக குவைத் தமிழ்சங்கம் மூலம் தகவல் கிடைத்துள்ளது என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 40 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடித்தக்கது. ஆறு மாடிகள் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் தங்கியுள்ளனர். இந்த கட்டிடம் குவைத் நாட்டை சேர்ந்தவருக்கு சொந்தமானது.
தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 195 பேர் தங்கி இருந்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். தீ விபத்து ஏற்பட்ட நிலையில் உடல் கருகியும், புகையை சுவாசித்த காரணத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டும் பெரும்பாலானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
குவைத் தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த தீ விபத்தில் தமிழர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்தம் விவரங்களைப் பெற்று, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு உத்தரவிட்டார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குவைத் தீ விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்களான +91 1800 309 3793 (இந்தியாவிற்குள்), வெளிநாடு எனில் +91 80 6900 9900, +91 80 6900 9901 என்ற இரு எண்களிலும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் தீ விபத்தில் 53 பேர் பலியாகியுள்ள நிலையில், அவர்களில் 40க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் எனத் தெரியவந்துள்ளது. அங்கு 5 தமிழர்கள் நிலை என்ன என்பது குறித்து தகவல் தெரியாததால் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் அமைச்சர் மஸ்தானுடன் ஆலோசனை நடத்தினார் முதல்வர் ஸ்டாலின்.
அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், "குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழப்பு என தமிழ்ச் சங்கங்கள் கூறியுள்ளன. குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் உள்ளது. உடல்களை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பலியான தமிழர்கள் விவரங்களை இந்திய தூதரகம் இன்னும் வெளியிடவில்லை. தூதரகம் மூலம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு தமிழ்ச் சங்கங்கள் மூலம் தமிழக அரசு உதவி வருகிறது.
கருப்பண்ணன் ராமு, வீராசாமி மாரியப்பன், சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, முகம்மது ஷெரீப், புனாஃப் ரிச்சர்டு ராய் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் உடல்களை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications