சீமானுக்கு பயந்து முருகன் மாநாடா? முருகனுக்கு நாங்க செஞ்சத கேளுங்க! லிஸ்ட் போட்ட அமைச்சர் சேகர்பாபு!
சென்னை: முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக திமுக அரசை தொடர்ச்சியாக விமர்சித்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வரும் நிலையில், திமுக ஆட்சியில் முருகன் கோவில்களுக்கு செய்த பணிகளை பட்டியல் போட்டு பதிலடி கொடுத்துள்ளார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் முருக பக்தர்களை உலகளவில் ஒருங்கிணைக்கும் வகையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வரும் ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் இந்த முருகன் மாநாட்டில் பங்கேற்கின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக அரசு முருகன் மாநாடு நடத்துவதை விமர்சித்து வருகிறார். திடீரென்று முருகன், திமுகவினருக்கு கடவுளாக காட்சியளிக்கிறார். உண்மையிலேயே முருகனுக்கு மாநாடு நடத்துகிறீர்களா இல்ல அல்லது சீமானுக்கு பயந்து செய்தீர்களா? நான் முருகன் வேலை தூக்கிய பின்பு தான் நீங்கள் முருகன் வேலை தூக்குகிறீர்கள் என விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “சீமான் புரிந்தும் புரியாமலும் அறிந்தும் அறியாமலும் பேசுவார். கட்டுச் சோற்றில் பூசணிக் காயை மறைக்கும் வித்தையை கற்றவர் சீமான். திமுக ஆட்சியை பொறுத்தவரை தமிழ்க் கடவுள் முருகனுக்கு புகழ் சேர்க்கும் வகையில், திருச்செந்தூரில் 300 கோடி ரூபாய்க்கு பெருந்திட்ட வரைவை உருவாக்கி மாபெரும் திருப்பணி அங்கு நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெறும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் 55 ஏக்கர் நிலத்தை 58 கோடி செலவில் பெருந்திட்ட வரைவுக்காக கையகப்படுத்த உள்ளோம். தற்போது முதல் பெருந்திட்ட வரைவு 99 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகுதான் பழனி தண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. தமிழ் மந்திரங்களும் குடமுழுக்கு விழாவில் ஓதப்பட்டன.
உண்மைய சொல்லுங்க.. முருகனுக்கு மாநாடு நடத்துறீங்களா எனக்கு பயந்து நடத்துறீங்களா? சீமான் ஆவேச கேள்வி!
திருத்தணியில் 90 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருப்பரங்குன்றத்தில் ரோப் கார் வசதியும், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த 66 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமி மலையில் பெருந்திட்ட வரைவின் வாயிலாக 20 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையெல்லாம் தேர்தலை மனதில் வைத்தா செயல்படுத்தி வருகிறோம்? திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 1922 கோயில்களுக்கு குட முழுக்கு நடத்தப்பட்டுள்ளது. முருகனுக்கு பெருமை சேர்க்கும் மாநாட்டை தேர்தலை மையப்படுத்தி நடத்தவில்லை. ஏனெனில் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கின்றன. 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பிறகும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி தான் அமையும். எனவே முருகன் மாநாட்டை அரசியலோடு தொடர்புபடுத்தி பேச வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications