தமிழ்நாடு முழுக்க “Pro Incumbency” தான்.. 2026-லும் நம்ம தான்.. அடித்துச் சொல்லும் செந்தில் பாலாஜி!
சென்னை: தமிழ்நாடு முழுக்க திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது, "Pro Incumbency" தான் எங்கும் எதிரொலிக்கிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல், மக்கள் நலனுக்காக அனுதினமும் உழைத்து வரும் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலினின் உழைப்பிற்கும், திராவிட மாடல் அரசுக்கும், பெரியாரை இகழ்ந்து அரசியல் செய்ய நினைத்த அற்ப பதர்களை ஓடவிட்ட தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி!

குரங்கு கையில் சிக்கிய பூமாலையாய் தன் கைக்கு கிடைத்த கட்சியை சீரழித்து சின்னாபின்னமாக்கி தோல்வி மேல் தோல்வி கண்டு தோல்விசாமி இல்லாத பொய்களை வீசுவதே அன்றாட அலுவலாக வைத்திருக்கிறார். அதனால்தான் மக்களை சந்திக்க முடியாமலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்க துணிவில்லாமல் தேர்தலை சந்திக்காமல் ஓடி ஒளிந்துக் கொண்டார்.
வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்லாமல் வாக்களிக்காத மக்களின் நலனுக்காகவும் இந்த அரசு பாடுபடும் என அறிவித்து செயல்பட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். அதன் காரணமாக இன்று ஈரோடு கிழக்கில் அதிமுக வாக்குகள் அனைத்தும் திமுகவிற்கு வந்துள்ளது.
தமிழ்நாடு முழுக்க திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது; "Pro Incumbency" தான் எங்கும் எதிரொலிக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அலைதான் தமிழ்நாடு முழுக்க அடித்துக் கொண்டிருக்கிறது. இது 2026 தேர்தலிலும் எதிரொலிக்கும்!" எனத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சந்திரகுமார் 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை வீழ்த்தி வெற்றி பெற்றார். திமுக வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட அத்தனை பேரும் டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications