200 தொகுதி என்னங்க! 234 தொகுதியிலும் திமுகதான் ஜெயிக்கப்போகுது பாருங்க! சீரியசாக சொல்லும் சேகர் பாபு
சென்னை: எங்களைப் பார்த்துதான் பாஜகவுக்கு டென்ஷன் என்றும், சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள எட்டுக்கால் பாய்ச்சலில் திமுக தயாராகி வருவதாகவும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தாமரை எங்கேயாவது மலர்ந்தால் தானே எங்களுக்கு டென்ஷன் ஆகும். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை கூண்டோடு ஏறக்கட்டி விட்டோம். அதனால், எங்களுக்கு எந்த டென்ஷனும் இல்லை. எங்களைப் பார்த்துதான் பாஜவுக்கு டென்ஷன். திமுகவைப் பொருத்தவரை தேர்தல் பணியைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளோம்.

நாலு கால் பாய்ச்சலில் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்துள்ளோம். தற்போது சட்டப் பேரவைத் தேர்தலை எட்டுக்கால் பாய்ச்சலில் பாயத் தயராகிக் கொண்டிருக்கிறோம்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒருபுறம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மறுபுறம், மாவட்டத்தின் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என அனைத்துப் பகுதிகளிலும் மக்களின் குறைகளையும், தேவைகளையும் நேரடியாகச் சென்று பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தலில் 200 என்றார். நிச்சயம் 200 அல்ல 234 என்ற இலக்கை நோக்கி திராவிட முன்னேற்றக் கழகம் சென்று கொண்டிருக்கிறது. எனவே, டென்ஷன் திமுகவுக்கு அல்ல. எங்களை எதிர்த்து களத்தில் நிற்பவர்களுக்குத்தான் அதிக டென்ஷன் உள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்கள் கனகசபையில் நின்று வழிபடுவது தொடர்பான கேள்விக்கு, நீதிமன்றம் என்ன கூறுகிறதோ அதனை ஏற்று செயல்படுத்த இந்த அரசு தயாராக இருக்கிறது. நீதிக்குத் தலைவணங்கும் ஆட்சிதான் ஸ்டாலின் ஆட்சி.
திருக்கோயிலைப் பொருத்தவரை இந்து சமய அறநிலையத் துறை சட்டங்களில், எந்த கோயில்களாக இருந்தாலும் அங்கிருந்து புகார்கள் வரப்பெற்றால் அதன் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதற்கு முழுமையாக அதிகாரம் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில், கனகசபையின் மீது ஏறிய மக்களை தடுத்து நிறுத்தியதன் காரணமாகத்தான் இந்து சமய அறநிலைத் துறை அதில் தலையிட்டது.
ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டியிருந்தது. அந்த அரசாணையை எதிர்த்து ஏற்கனவே நீதிமன்றத்துக்கு சென்றபோது, கனகசபையின் மீது ஏறுவதை தடை செய்யக் கூடாது என்றே நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்து. அதேபோல, கடந்த ஆண்டுகூட கனகசபையின் மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
நிச்சயமாக இந்து சமய அறநிலையத் துறை தீட்சிதர்களோடு போராட வேண்டிய அவசியம் இல்லை. பக்தர்களின் நலன் காக்கின்ற அரசு. பக்தர்களுக்கு அவமாரியதையும், அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றாத நிலையில் நிச்சயம் அரசு தலையிடும். அதை நீதிமன்றமும் வரவேற்கும். திருக்கோயில் என்பது பக்தர்கள் தரிசனம் செய்வதற்காகவே உள்ளது.
ஒரு குறிப்பிட்ட மக்கள், குறிப்பிட்ட தீட்சிதர்கள் தரிசனம் செய்வதற்காக அல்ல. எனவே, பொதுமக்களுக்கு கேடு விளைவிக்குமானால் பொதுமக்களுடைய தரிசனத்தில் குறைபாடுகள், இடர்பாடுகள் வருமானால், நிச்சயமாக இந்து சமய அறநிலையத் துறை தலையிடும். நீதிமன்றம் காட்டும் வழியை நோக்கி செல்வோம்.
நீதிமன்றத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பான வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இந்த சட்டப் போராட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை, தமிழக அரசு வெல்லும். எல்லா கோயில்களிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழில் குடமுழுக்கு நடந்த நேரமும் ஒதுக்கப்பட்டு வருகிறது.
அன்னைத் தமிழில் அர்ச்சனை, அன்னைத் தமிழில் குடமுழுக்கு என திமுக ஆட்சியில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எனும் வகையில், பல உதாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.












Click it and Unblock the Notifications