"அதை சொன்னீங்களே.. இதை சொன்னீங்களா?".. விஜயபாஸ்கர் பேசியதும்.. ஆஃப் செய்த அமைச்சர்.. அதிர்ந்த அவை
சென்னை: மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரின் கேள்விக்கு இன்று சட்டசபையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அளித்த பதில் எம்எல்ஏக்கள் இடையே கவனம் பெற்றது.
2023ம் வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. சட்டசபை கூட்ட தொடரின் முதல் நாளிலேயே அவையில் மிகப்பெரிய அளவில் சர்ச்சைகள் ஏற்பட்டன. இந்த நிலையில் இன்று கேள்வி நேரத்தில் எம்எல்ஏக்கள் கேள்விகளுக்கு அமைச்சர்களுக்கு பதில் அளித்து வருகின்றனர்.
மாஜி அமைச்சர், அதிமுக எம்எல்ஏ விஜயபாஸ்கர் சட்டசபையில் எழுப்பிய கேள்வியில், விராலி மலை - துவரங்குறிச்சி வழித்தடத்தில் மொத்த நீளம் 32 கிலோ மீட்டர் சாலையில் புதிய நகர பேருந்துகளை விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

போக்குவரத்து துறை
இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அளித்த பதிலில், விராலி மலை - துவரங்குறிச்சி வழித்தடத்தில் மொத்த நீளம் 32 கிலோ மீட்டர். இந்த சாலை திருச்சி செல்லும் சாலையில் உள்ளது. இங்கே பல ஊர்கள் உள்ளன. இதனால் இங்கே புறநகர் பேருந்துகள் அதிகம் இயக்கப்படுகின்றன. டவுன் பேருந்துகள், உள்ளூர் பேருந்துகளும் அதிகம் இயக்கப்படுகிறது. மக்கள் தொகைக்கு ஏற்றபடி இங்கே கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதனால் இந்த சாலையில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டார்.

விஜயபாஸ்கர்
இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் எழுப்பிய கேள்வியில், இரண்டு மாவட்டங்களை இணைக்க கூடிய வழித்தடம் அது. அந்த வழித்தடத்தில் மட்டும் 17 கிராமங்கள் இருக்கின்றன. ஏழை எளிய மக்கள் பயன்பட கூடிய வழித்தடம் அது. அங்கு விரைவு பேருந்துகள் கிராமங்களில் நிற்பது இல்லை. விராலி மலைக்கு வந்த பேருந்துகள் கூட வருவது இல்லை. நகர பேருந்துகள் மட்டுமே வருகின்றன. இந்த நகர பேருந்துகளை தனியாக 6-7 பேருந்துகள் என்ற எண்ணிக்கையில் விராலிமலைக்கு இயக்க வேண்டும். இந்த நகர பேருந்துகள் மட்டுமே ஏழை எளிய மக்களுக்கு அதிகம் பயன்படுகிறது. அதை கூடுதலாக இயக்க வேண்டும் என்று விஜயபாஸ்கர் கோரிக்கை வைத்தார்.

அமைச்சர் சிவசங்கர்
இதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், நகர பேருந்துகள் ஏழை எளிய மக்களுக்கு உதவுகிறது என்று விஜயபாஸ்கர் பெருந்தன்மையாக ஒப்புக்கொண்டதற்கு நன்றி. அதை ஒப்புக்கொண்ட அவர் இன்னொரு தகவலையும் கூடுதலாக சொல்லி இருக்கலாம். திராவிட மாடல் ஆட்சியில் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதால் நகரப்பேருந்துகளை அவசியம் விராலிமலைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கலாம். 222 கோடி 55 லட்சம் பேர் இந்த திட்டம் மூலம் பயன் அடைந்துள்ளனர்.

பெண்கள் சேவை
ஏழை, எளிய பெண்களுக்கு இந்த சேவை அதிகம் உதவுகிறது. பெண்கள் தினமும் 45 லட்சம் என்ற அளவில் இந்த சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த அளவிற்கு இந்த சேவைக்கு பெரிய வரவேற்பு உள்ளது. இருப்பினும் விஜயபாஸ்கரின் கோரிக்கையை முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்று அவரின் கோரிக்கை நிறைவேற்றப்படும், என்று கூறினார். அமைச்சர் சிவசங்கர் இந்த பதிலை சொன்னதும் உடனே அவையில் கரகோஷம் கேட்டது. மேஜையை தட்டி அரங்கமே அதிரும் வகையில் கரகோஷம் எழுப்பப்பட்டது.

விஜயபாஸ்கர்
இதையடுத்து பேசிய விஜயபாஸ்கர், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகளை தொடங்க வேண்டும் என்று கூறினார். அதற்கு பதில் சொன்ன அமைச்சர் சிவசங்கர், கேள்வி நேரத்தில் குற்றச்சாட்டுகளை வைக்க கூடாது. இருந்தாலும் சொல்கிறேன். கடந்த 5 வருடத்தில் பேருந்து போக்குவரத்து துறையில் புதிய ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பணிக்கு அமர்த்தப்படவில்லை. ஒருவரை கூட இவர்கள் வேலைக்கு எடுக்கவில்லை. அதன் காரணமாகவே கடந்த ஆட்சியில் இவர்கள் பேருந்துகளை நிறுத்தினார்கள். அப்படி நிறுத்தப்பட்ட பேருந்துகளை இப்போது தொடங்கி வருகிறோம். விரைவில் நிறுத்தப்பட்ட மற்ற பேருந்துகளையும் தொடங்குவோம் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications