ரஜினி பேச்சை சுட்டிக்காட்டி திமுக மேடையில் உதயநிதி ஸ்டாலின் சொன்ன வார்த்தை.. கலக்கத்தில் சீனியர்கள்!
சென்னை: ரஜினிகாந்த் பேசியதைச் சுட்டிக்காட்டி, திமுக கூட்டத்தில் பேசியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். ரஜினிகாந்த், சீனியர்கள் பற்றி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையிலேயே பேசியது சலசலப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இளைஞர்களுக்கு வழிவிட்டு அரவணைத்து வழிநடத்தி கைப்பிடித்து கூட்டிச் செல்ல வேண்டும் என திமுக கூட்டத்தில் பேசி உள்ளார் உதயநிதி.
சென்னை கலைவாணர் அரங்கில் திமுக பொறியாளர் அணி நடத்திய கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவில் அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். 'My Roots' மொபைல் செயலியைத் தொடங்கி வைத்து, பொறியாளர் அணியின் வருங்கால செயல் திட்டத்தையும் வெளியிட்டார்.

பொறியாளர் அணி நடத்திய கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த பேச்சாளர்களுக்கு காசோலை வழங்கி வாழ்த்தினார். மேலும், திமுக பொறியாளர் அணிச் செயலாளர் எஸ்.கே.பி.கருணா எழுதிய 'கலைஞர் கட்டிய தமிழ்நாடு' புத்தகத்தை வெளியிட்டார்.
தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்றைய விழாவில் சுமார் 45 நிமிடங்கள் நமது தலைவர் பற்றியும் , கலைஞர் பற்றியும் பாராட்டி பேசினார். புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.
அவர் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எவ்வளவோ தலைவர்கள் வந்திருக்கிறார்கள், வாழ்ந்திருக்கிறார்கள், சாதித்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல.. இந்தியாவில் மட்டுமல்ல.. உலகத்திலேயே எந்த ஒரு தலைவருக்கும் இப்படி ஒரு நூற்றாண்டு நிகழ்ச்சியை எந்த ஒரு இயக்கமும் இதுவரை நடத்தியதும் இல்லை இனி நடத்தப்போவதும் இல்லை என்று ரஜினிகாந்த் கூறினார்.
அந்த அளவிற்கு திமுக கலைஞர் நூற்றாண்டை வெகு சிறப்பாக கொண்டாடி இருக்கிறது. அதற்கு வாழ்த்துகள். இதற்கு காரணம் நம்முடைய கழகத் தலைவர் முதல்வர் மட்டுமல்ல, கழக நிர்வாகிகள் மட்டுமல்ல, கலைஞரின் உயிரினும் மேலான உடன் பிறப்புகள் தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.
திமுக கட்சியில் சேருவதற்கும் பொறுப்புகளுக்கு வருவதற்கும் ஏராளமான இளைஞர்கள் தயாராக இருக்கின்றனர். நாம் தான் அவர்களுக்கு வழிவிட்டு அரவணைத்து வழிநடத்தி கைப்பிடித்து கூட்டிச் செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
நேற்றைய நிழ்ச்சியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசும்போது எதற்கு அதிக கைத்தட்டல் எழுந்தது என்று உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். நான் அதைச் சொன்னால் மனதில் வைத்துக் கொண்டு பேசிகிறார் என்று நினைத்துக் கொள்வீர்கள்.
மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு பற்றி 28 ஆண்டுகளுக்கு முன்னர் கருணாநிதி பேசியது தற்போதும் பொருந்தும். சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி செலவாகி்றது. 50:50 பங்கு நிதி என்றாலும் இது வரை மத்திய அரசு ஒரு பைசா நிதி கூட தரவில்லை" எனப் பேசினார்.
முன்னதாக, அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், "ஒரு பள்ளியில், ஆசிரியர்கள் புதிய மாணவர்களை எளிதாக சமாளித்து விடுவார்கள். ஆனால், பழைய மாணவர்களை சமாளிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. இங்கு ஏகப்பட்ட பழைய மாணவர்கள் இருக்கிறார்கள். அதுவும் அவர்கள் சாதாரண மாணவர்களும் கிடையாது. அசாதாரணமானவர்கள். அனைவரும் நல்ல 'ரேங்க்' வாங்கிவிட்டு வகுப்பறையை விட்டு செல்ல மாட்டேன் என்று அமர்ந்துள்ளார்கள்.
கருணாநிதியுடன் இருந்தவர்களை சிறு வயதில் இருந்து பார்த்து வந்துவிட்டு, அவர்களை சமாளிப்பது என்பது சாதாரண விஷயமா? துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். அவர் கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். அவரிடம் ஏதாவது விஷயத்தை செய்ய போகிறோம் என்று சொன்னால், சந்தோஷம்னு சொல்வார். நன்றாக இருக்கிறது என்று சந்தோஷம் என்கிறாரா? அல்லது ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கூறுகிறாரா? என ஒன்றும் புரியாது. இதற்கு, முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஹேட்ஸ் ஆஃப்" என்று கூறினார்.
திமுகவில் சீனியர்கள் பலர் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள் என்கிற வகையில் ரஜினிகாந்த் பேசியதைத்தான் நேற்றைய நிகழ்வில் அமைச்சர் உதயநிதி சுட்டிக்காட்டி, இளைஞர்களுக்கு வழிவிட்டு ஒதுங்க வேண்டும் என சூசகமாகப் பேசி இருக்கிறார். இது திமுகவில் விவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளது.












Click it and Unblock the Notifications