கண்கொள்ளாக் காட்சி.. சென்னை விமான வான் சாகசம்.. நேரில் செல்ல முடியாதவர்கள் “LIVE” ஆக பார்க்கலாம்!
சென்னை: விமானப்படையின் வான் சாகச நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும் விமானப்படை வான் சாகச நிகழ்வை பார்க்க நேரில் செல்ல முடியாதவர்கள், யூடிபில் நமது மொபைல் போனிலேயே நேரலையாக பார்க்கலாம். மேலும், தொலைக்காட்சிகளிலும் பார்க்கலாம்.
இந்திய விமானப்படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், சென்னையில் இன்று மிகப் பிரமாண்ட விமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. மெரினா கடற்கரையில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியுள்ள இந்த சாகச நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை நடைபெறும்.

மெரினாவில் நடைபெற்று வரும் விமான சாகச நிகழ்ச்சியை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் நேரில் கண்டு களிக்கின்றனர். சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்றுள்ளார்.
இந்த பிரமாண்ட விமான வான் சாகச நிகழ்வை லட்சக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், பள்ளிச் சிறுவர் சிறுமியர்களை அழைத்துக்கொண்டு பெற்றோர்கள் மெரினா கடற்கரைக்கு வந்துள்ளனர். பொதுமக்கள் திரண்டு வந்துள்ளதால், மெரினா கடற்கரைக்கு அந்தப்பக்கம் வங்கக் கடல், இந்தப் பக்கம் மக்கள் கடலாக காட்சி அளிக்கிறது.
இந்த விமான சாகச கண்காட்சியில் இந்திய விமானப் படையின் பல்வேறு வகையான 72 விமானங்கள் காண்போரைக் கவர்ந்திழுக்கும் வகையில், ஏரோபாட்டிக் வான் சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றன. வானில் லாவகமாக வந்து குட்டிக்கரணங்கள் அடித்து ஆச்சர்யப்படுத்தும் ஆகாஷ் கங்கா அணி, ஸ்கை டைவிங் கலையில் விமானங்கள் ஒன்றுடன் ஓன்று மிக நெருக்கமாக வந்து சாகசங்கள் நிகழ்த்தும் சூர்யகிரண் ஏரோபாட்டிக் டீம், வான் நடனத்தில் ஈடுபட்டு மெய்சிலிர்க்க வைக்கும் சாரங் ஹெலிகாப்டர் அணி ஆகியவை பங்கேற்று சாகசங்களை நிகழ்த்தி வருகின்றன.
சென்னை மெரினாவில் தொடங்கியது விமான சாகச நிகழ்வு! வெயிலுக்கு நடுவே குடைகளுடன் திரண்டு மக்கள் உற்சாகம்
மெரினாவில் நடைபெறும் விமான சாகச நிகழ்வுகளை காண சிறப்பு போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனினும், லட்சக்கணக்கானோர் திரண்டுள்ளதன் காரணமாக மெரினாவை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காலையில் இருந்து திரளானவர்கள் மெரினாவில் குவிந்துள்ள நிலையில், விமான சாகச நிகழ்ச்சியை காண ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
விமான சாகச நிகழ்ச்சியை காண நேரில் செல்ல முடியாதவர்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே நேரலையில், விமான சாகச நிகழ்ச்சியைக் காண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்திய விமானப் படையின் (Indian Air Force) அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் விமான சாகச நிகழ்ச்சியை நேரலையில் வர்ணனைகளுடன் கண்டுகளிக்க முடியும்.
மேலும், தூர்தர்ஷன் நேஷனல் மற்றும் DD தமிழ் தொலைகாட்சிகளிலும் இந்த விமான சாகச நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும், முன்னணி செய்தி தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. நேரில் பார்க்க தவறவிட்டவர்கள் வீட்டில் இருந்தபடியே, விமான சாகசத்தின் கண்கொள்ளாக் காட்சிகளைப் பார்த்து ரசிக்கலாம்.












Click it and Unblock the Notifications