அரும்பாக்கம் தீபாவுக்கு ஏற்பட்ட தவறு.. சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
சென்னை: சென்னையில் வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்கும் விதமாக, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை அரசு கடந்த சில ஆண்டுகளாக மிக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. பணிகள் முறையாகவும், பாதுகாப்பாகவும் நடக்கிறதா என்பதை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.
வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னமும் ஒரு மாதம் தான் இருக்கிறது. ஆனால் இப்போதே மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவ மழை காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை மழை நீர் தேங்கும் பிரச்சனை என்பது அதிகமாக இருக்கும்... கடந்த 2023ம் ஆண்டு ஏற்பட்ட அதீத மழை மற்றும் அதனை தொடர்ந்து வந்த வெள்ளம் இயல்பு நிலைக்கு திரும்ப ஒரு வாரம் வரை ஆனது.

ஒவ்வொரு வருடமும் டிசம்பரில் ஏதாவது சம்பவம் நடப்பது தொடர் கதையாக உள்ளது. அதற்கு காரணம் மழை மட்டுமல்ல.. கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்பு தான். கால்வாய்கள் சுருங்கி போன காரணம், கால்வாய்களே காணாமல் போனது மற்றொரு காரணம். இதுதான் சென்னையின் வெள்ளத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
இதனால் அரசு புதிய கால்வாய்களை உருவாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மழை வெள்ள பாதிப்பை தடுக்க, தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சியும் சேர்ந்து கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்தும் முயற்சியில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக இறங்கியுள்ளன. சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மாநகராட்சி மண்டலங்கள் உள்ளன. இதில், சென்னை மாநகராட்சியில் 3,040 கிலோமீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் வலையமைப்பு இருக்கிறது.
இதில் இந்தாண்டு 1,084 கிலோமீட்டர் நீளத்திற்கு வடிகால்களை தூர்வார சென்னை மாநகராட்சி திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறது. மேலும் மழைநீர் வடிகால் பணிக்காக, இந்த ஆண்டு 1,032 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிபணிகளை மேற்கொண்டு வருகிறது.. வெள்ளத்தைத் தடுக்க, ஜெர்மன் தொழில்நுட்பத்தின் மூலம் மழைநீரைச் சேமிக்கும் தொட்டிகள் அமைக்கப்பட்டு, பல லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் பணி நடக்கிறது
இது தவிர சென்னையில் 600 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரும்பாக்கத்தில் மழைநீர் வடிகாலில் கடந்த 1-ந்தேதி இரவு தீபா என்ற பெண் விழுந்து உயிரிழந்ததாக புகார் எழுந்தது. மாநகராட்சியின் அலட்சியமே இதற்கு காரணம் என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும், சென்னை முழுவதும் மழைநீர் வடிகால்வாய் பணிகள் முறையாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மழைநீர் வடிகால்வாய் பணி நடைபெறும் இடத்தை சுற்றி பாதுகாப்பு தடுப்பு அமைக்கப்பட்டிருக்கிறதா? கால்வாய் பணி நடைபெறுவது குறித்த எச்சரிக்கை பதாகைகள் இடம்பெற்றுள்ளதா? உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications